அயோத்தி – விமர்சனம்!

அயோத்தி – விமர்சனம்!

ம் தமிழர்களுக்கும், வட இந்தியர்களுக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. தென் கோடியில் உள்ள தமிழர்கள் காசி யாத்திரை செல்வதும், வட மாநிலத்தவர்கள் ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை வருவதும் ஆன்மிக உறவால் வடக்கும், தெற்கும் இணைந்துள்ளதும் இவை அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான். இப்படி ஆன்மிக டூர் வந்த ஒரு வட இந்திய குடும்பத்துக்கு உதவ முனைந்த தமிழ் ஆசாமிக்கு அடுத்தடுத்து தொடரும் சிக்கல்களை வைத்து அயோத்தி என்ற நாமகரணத்துடன் ஒரு முழு நீள சினிமாவைக் கொடுத்து அடடே சொல்ல வைக்க முயன்று இருக்கிறார்கள்.

அதாவது ஆணாதிக்கம் அதிகம் கொண்ட மனநிலையோடு இருக்கும் தீவிர ராம பக்தர் பல்ராம் (யஷ்பல் ஷர்மா) .. எங்கும் எதிலும் தான் வைத்ததே சட்டம் என்று சாதிப்பவர் தன் மனைவி, மகள், மகன் சகிதம் இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்கிறார். மதுரைக்கு இரவில் வந்திறங்கும் அந்த குடும்பம் கார் ஒன்றை வாடகைக்குப் பிடித்து இராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில்  விபத்துக்குள்ளாகிறது. இதில் பல்ராமின் மனைவியான (ஜானகி) இறந்து போகிறார். இப்படி விபத்தில் இறக்கும் நபர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாக இருக்கும் நிலையில், ஷர்மா தங்கள் கலாசாரப்படி உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். இறுதியாக ஜானகி உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? இவர்களுக்கு உதவ வந்த சசிகுமாரின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே அயோத்தி படத்தின் கதை!

நாயகனாக அல்லாமல் மெயின் கேரக்டராக அதிலும் வழக்கம் போல் ஹெல்பிங் மைண்ட் ரோலில் வரும் சசிகுமார், கதைக்கு என்ன தேவையோ அதை குறையில்லாமல் செய்திருக்கிறார் என்பதை விட சசிகுமாரிடம் என்ன வருமோ அதை வைத்தே அழகாக கொஞ்சூண்டு வேலை வாங்கி அவர் பாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குநர்.. அதிகம் கவர்வது ஷிவானி கதாபாத்திரத்தில் வரும் (ப்ரீத்தி அஸ்ராணி)தான். படம் முழுக்க சீரியஸான ரோல், பல இடங்களில் அப்பா போக்கால் அதிர்ந்து போய் கண் கலங்கியபடி அவர் கொடுத்திருக்கும் நடிப்பும், தனது அம்மாவின் நிலையையும், அவர் உயிரிழந்த பிறகு அவர் உடலையும் பார்த்து கலங்கும் இடங்களிலெல்லாம் படத்துக்கும் வலு சேர்க்கிறது. ஆண் என்னும் திமிரோடு உலா வரும் யஷ்பால் சர்மா தீவிர ராமர் பக்தராக இருந்தாலும், வட மாநிலத்தவரின் மேனரிஸத்தை – அதாவது எச்சிலை கண்ட இடத்தில் துப்புவது, ஃபேமிலியை தன் விழிகளாலேயே கட்டுபடுத்துவது என நடிப்பில் தீவிரத்தை காட்டி மிரட்டு இருக்கிறார்.நாயகனின் நண்பனாக புகழ், படம் முழுவதும் வரும் போஸ் வெங்கட்,, கல்லூரி வினோத், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள்.. அதிலும் புகழை வைத்து காமெடி எதுவும் முயற்சி செய்யாமல் ஒரு ஜீவனாக நடமாட விட்டிருப்பதே ரசிக்க வைக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் கேமரா வழியே காசி முதல் ராமேஸ்வரம் மட்டுமின்றி கேரக்டர்களின் உணர்வுகளை தனி லைட்டிங் கொடுத்து வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் எடுபடவே இல்லை.. அத்துடன் பின்னணி இசை கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஒலித்து லயிப்பை சிதற வைத்து விடுகிறது..

ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் ஹிந்தி பேசுவது போல் படம் முழுக்க வைத்து அதையும் சப் டைட்டிலில் தப்புத் தப்பாக போட்டு கடுபேற்றிய்து தொடங்கி போலீஸ் ஸ்டேஷனில் குத்து பாடல் அரங்கேற்றம் எல்லாம் செய்து டென்ஷனாக்கினாலும் நல்ல மெசெஜ் சொல்ல முயன்றிருப்பதில் பாஸ் மார்க் வாங்கி விட்டது இந்த அயோத்தி

மார்க் 3/5

.

error: Content is protected !!