ஓவியர் வீர சந்தானம் காலமானார்!
புகழ்பெற்ற தமிழ் ஆர்வலரும் ஓவியருமான வீரசந்தானம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரசந்தானத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர் வீரசந்தானம். ஓவியத் துறையையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார். தோற்பாவைக் கூத்து, தொன்மையான இசைக் கருவிகள், கோயில் சிற்பங்கள், நிகழ்த்து கலைகள் போன்றவை இவருடைய ஓவியங்களில் தனித்து நிற்பவை. மரபுக் கலை, கட்டிடம் மற்றும் மரபு இசைக் கருவிகளை தனது ஓவியப் படைப்பின் வழியே இவர் மீள் உருவாக்கம் செய்துள்ளார். ஆடை வடிவமைப்புத் துறை யில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.
ஓவியர் வீரசந்தானம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன் கோவிலைப் பூர்மீகமாகக் கொண்டவர். சலசலத்துப்பாயும் ஆறுகளும், உப்பிலியப்பன் கோவில் சிற்பங்களும் ஏற்படுத்திய தாக்கத்தில் ஓவியராக மிளிர்ந்தார் வீரசந்தானம். அவரது வீரியமிக்க கோடுகள், அல்போன்சோவின் கிறிஸ்தவக் கதை, நடராஜரின் நாட்டியத்தை சித்தரிக்கும் ஓவியங்களாய் வீரசந்தானத்தின் இதயத்தில் கோடுகளாக ஊர்ந்து அவரை ஓவியராக பரிணமிக்கச் செய்தன. அதோடு, ஓவியர்கள் தனபால், அந்தோணிதாஸின் ஓவியத் தாக்கம் வீர சந்தானத்திற்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பழந்தமிழகத்தின் நாட்டார் கூறுகளையும், பாரம்பரியமிக்க தென் திராவிட கோயில் சிற்பங்களையும் உள்ளடக்கி வீரசந்தானம் படைத்துக்காட்டிய ஓவியங்கள் தமிழக ஓவியக் கலையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தன. இளவயதிலேயே மும்பையில் உள்ள நெசவாளர் பணி மையத்தில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்த வீரசந்தானம், தமிழினத்திற்கான போராட்டங்களில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வதற்காக விருப்ப ஒய்வு பெற்றார்.
பாலு மகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘தானே’ புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஓவியர் வீரசந்தானத்தின் கலைப் பயணத்தை எடுத் துரைக்கும் விதமாக ‘காமதேனு’ என்ற ஆவணப்படம் வெளியாகி யுள்ளது.
மேலும் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஓவியத்திறமையால் தத்ரூபமாக உருவாக்கிய பெருமை வீரசந்தானத்தையே சாரும். காலத்தால் அழியா ஓவியங்களைப் படைத்த வீரசந்தானத்தின் ஆற்றலுக்கு, அகில இந்திய தொழிற்துறை கண்காட்சியின் விருது 1997 ஆம் ஆண்டு கிடைத்தது. சிறந்த ஓவியத்திற்கான தேசிய விருது 1988 ஆம் ஆண்டு பெற்றார். வன விலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்திற்கான விருதை 1975 ஆம் ஆண்டும், சிறந்த ஓவியங்களைப் படைத்தமைக்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் வீரசந்தானத்தை வந்தடைந்தது!
இவர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


