ஆரவல்லி 2025: ‘மலை’யைக் காக்கும் சுப்ரீம் கோர்ட்ன் ‘மலை’யளவு நம்பிக்கை தீர்ப்பு!

ஆரவல்லி 2025: ‘மலை’யைக் காக்கும் சுப்ரீம் கோர்ட்ன் ‘மலை’யளவு நம்பிக்கை தீர்ப்பு!

ந்தியாவின் வடமேற்குப் பகுதியின் “பசுமை நுரையீரல்” (Green Lungs) என்று அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்கும் விவகாரத்தில்  சுப்ரீம் கோர்ட்டி  மீண்டும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்ததோடு, மலைத்தொடரின் வரையறையை மறுஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சையும் சுப்ரீம் கோர்ட்டின் தற்காலிகத் தடையும்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MoEF) பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்ட முந்தைய உத்தரவு, ஆரவல்லி மலைத்தொடரின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் இருப்பதாகச் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜனவரி 21 வரை முந்தைய பரிந்துரைகளை நிறுத்தி வைத்துள்ளனர் (Abeyance).

மேலும், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாகப் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரையறையில் உள்ள சிக்கல் என்ன?

மத்திய அமைச்சகக் குழு முன்பு அளித்த பரிந்துரையின்படி:

  • ஆரவல்லி மலை: 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நிலப்பரப்பு.

  • ஆரவல்லி மலைத்தொடர்: 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளின் தொகுப்பு.

இந்த “100 மீட்டர்” நிபந்தனை அமலுக்கு வந்தால், மொத்தம் உள்ள 12,081 குன்றுகளில் வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வளையத்திற்குள் வரும். மீதமுள்ள 11,000-க்கும் மேற்பட்ட குன்றுகள் சுரங்கத் தொழிலுக்குத் திறந்துவிடப்படும் அபாயம் இருப்பதைச் சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். இது மலைத்தொடரின் தொடர்ச்சியை (Continuity) உடைத்துவிடும் என்பதே அவர்களின் பிரதான வாதம். 

தார் பாலைவனத்தைத் தடுக்கும் ‘பசுமைச் சுவர்’

ஆரவல்லி மலைத்தொடர் வெறும் கற்குவியல்கள் அல்ல. ராஜஸ்தானின் தார் பாலைவனம், வளமான இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதியை நோக்கி விரிவடையாமல் தடுக்கும் ஒரே இயற்கை அரண் இதுதான்.

  • சுரங்கத் தடை: வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் முக்கியச் சூழல் மண்டலங்களில் சுரங்கத் தொழில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

  • விதிவிலக்கு: அணுசக்தி மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான தாதுக்களுக்கு மட்டுமே மிக அரிதான விதிவிலக்கு அளிக்கப்படும்.

சுரங்க மாஃபியாக்களும் ‘சஸ்டைனபிள்’ தீர்வும்

முழுமையான சுரங்கத் தடை என்பது சட்டவிரோத சுரங்க மாஃபியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே, ஜார்க்கண்டின் சரண்டா வனப்பகுதியில் செயல்படுத்தப்பட்டது போல, “நிலையான சுரங்கத் திட்டம்” (Sustainable Mining) வகுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புதிய குழுவின் அறிக்கை வரும் வரை புதிய சுரங்க உரிமங்களோ, குத்தகை புதுப்பித்தலோ செய்யக்கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய நிபுணர் குழுவின் பணி

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அமைக்கவுள்ள புதிய குழு, முந்தைய அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்யும். மலைகளின் உயரத்தை மட்டும் வைத்துப் பிரிக்காமல், ஒட்டுமொத்தச் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் “ஆரவல்லி” என்பதற்கான ஒரு சீரான வரையறையை (Uniform Definition) இக்குழு உருவாக்கும்.

 மொத்தத்தில் பல தசாப்தங்களாகத் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் காடழிப்பால் சிதைக்கப்பட்டுள்ள ஆரவல்லி மலைத்தொடரை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள இந்த “யு-டர்ன்” (U-turn) மிக அவசியமானது. இயற்கை வளங்களைச் சுரண்டுவதை விட, எதிர்காலத் தலைமுறைக்கான சூழலியல் பாதுகாப்பே முக்கியம் என்பதை இந்த இடைக்காலத் தடை உறுதிப்படுத்தியுள்ளது.

ரமாபிரபா

Related Posts

error: Content is protected !!