வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு: இந்திய நோய் கட்டுப்பாட்டு மையம் அதிர்ச்சி தகவல்!
கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், வெப்ப அலைகளால் அதிகளவில் மரணங்கள் நிகழக்கூடும் என மருத்துவர்கள் முன்னரே எச்சரித்துள்ளனர். சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ்க்கும் மேல், தொடர்ந்து 2 நாட்கள் வெப்பம் பதிவானால் அது வெப்ப அலையாக கருதப்படும். காலநிலை மாற்றத்தின் காரணமாக 21ம் நூற்றாண்டில் வெப்ப அலைகளின் தீவிரமும் அது நிகழும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது.இந்த வெப்ப அலைகள் நாம் சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 17,362 பேர் வெப்ப அலைகளின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்களுக்கு காரணமாக அமைவது ஹீட் ஸ்ட்ரோக் என்ற மருத்துவ நிலை. அதாவது, அதீத வெப்பநிலையை நமது உடல் தாங்கிக் கொள்ள முடியாத நிலையே ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகிறது. குறிப்பாக, உடலின் வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் உயரும்போது, குறைந்த இதய துடிப்பு, சுயநினைவு இழப்பு போன்றவை ஏற்படும். இதனிடையே, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அதாவது மார்ச் 1 முதல் இந்தியாவில் 8,500 க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் வெப்பம் தொடர்பான இறப்புகளும் பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் வெப்பம் தொடர்பான நோய்கள் மீது தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தீவிர கண்காணிப்பைச் செய்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 8,885 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வெப்ப நோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தேவைப்படும் போதெல்லாம், மாநிலங்களில் உள்ள கள நிலை அதிகாரிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் தொடர்பான சில இறப்புகளும் பதிவாகியுள்ளன.
அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழி திரவங்கள், ஐஸ் பேக்குகள், வாய்வழி ரீஹைட்ரேஷன் கரைசல் (ORS) போன்றவை போதுமான அளவில் கிடைப்பதன் மூலம் உடல்நலம் தொடர்பான நோயைச் சமாளிக்கத் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரத் துறைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற அரசியல் நிகழ்வொன்றில் ஏற்பட்ட வெப்ப தாக்குதலால் 11 பேர் உயிரிழந்தனர் என்பதும் நினைவுகூறத்தக்கது.