புலிட்சர் விருது 2018 அறிவிப்பு! -ராய்ட்டர் செய்தி நிறுவனமும் பெற்றது
சர்வதேச அளவில் தனி சாதனைப்படைத்த பத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அமெரிக்காவில் நாளிதழ் நடத்தியவர் ஜோஸப் புலிட்சர். ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் அவர். உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்தவர் பத்திரிகையாளராக ஆனார். பின்னர் செயின்ட் லூயி போஸ்ட்-டிஸ்பாட்ச், த நியூயார்க் வேர்ல்டு ஆகிய பத்திரிகைகளின் அதிபர் ஆனார். புலிட்சர் தனது மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு இதழியல் கல்லூரி தொடங்கவும் அவரின் பெயரால் விருதுகள் வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். அவர் மறைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ம் ஆண்டில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. முதலில், பத்திரிகைத் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலும் பல துறைகளுக்கு விருதுகள் விரிவுபடுத்தப்பட்டன. தற்போது மொத்தம் 21 பிரிவுகளில் விருதுகளும், ஐந்து பிரிவுகளில் ஆய்வு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் கொலம் பியா பல்கலைக் கழகத்தில் 102வது புலிட்சர் விருதுகளை டானா கானெடி அறிவித்தார். அப்போது பேசிய அவர் ஊடகங்கள் மக்களின் சந்தேகத்தை போக்கும் விதத்தில், நம்பிக்கை வைக்கும் படி யான செய்திகளை வெளியிட வேண்டும். மேலும் முற்போக்கு சிந்தனையுடன் பல தரப்பட்ட செய்திகளை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்சென்ட் மீது அளிக்கபட்ட பாலியல் புகார் செய்தி களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்கர் இதழ்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு, ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையே இருந்த தொடர்பை கண்டறிய புலன் விசாரணையில் ஈடுபட்டு பல அரியத் தகவல்களை வெளியிட்ட வாஷிங்டன்போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு சிறந்த புலன்விசாரணை பத்திரிகைக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்பான உடனடி செய்திகளை (பிரேகிங் நியூஸ்) வெளியிட்டதற்காக அமெரிக்காவின் தி பிரஸ் டெமோகிரட்டுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் சிறந்த தேசிய செய்திகளுக்கான விருதை பகிர்ந்து கொண்டுள்ளன.
அலபாமா ஊடகத்துறையின் கட்டுரையாளர் ஜான் அர்ஜிபல்ட், சிறந்த பிரேகிங் நியூஸ் புகைப்படத்துக்கான விருது தி டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகையின் ரையான் கெல்லி ஆகியோருக்கும் புலிட்சர் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகளை சிறப்பாக வெளியிட்டதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக போராடிய அதிபர் ரோட்ரிகோ டுடர்டே குறித்த செய்தியை வெளியிட்டதற்கு அது வழங்கப் பட்டது.அத்துடன் future photography- பிரிவில் ரோகிங்யா முஸ்லிம் மக்களின் அவல நிலையைப் படம் பிடித்த வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு புலிட்சர் விருது கிடைத்து ள்ளது. 2017- ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த ரோகிங்யா மக்களின் படகு டெக்னாஃப் நகர கடற்கரையை நெருங்குகையில் கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பெண் ஒருவரின் கைக்குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடும். கைக்குழந்தையை முகத்தின் மீது முகம் வைத்து அந்தத் தாய் அழும் காட்சியை ராய்ட்டர்ஸ் நிறுவனப் புகைப்படக் கலைஞர் பதிவு செய்தார். இந்தப் புகைப்படமும் future photography பிரிவில் விருது பெற்றுள்ளது. இந்த விருது 15,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசு கொண்டது




