அண்ணா பல்கலை.,மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் முன், ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஞானசேகரன் தரப்பில், அம்மாவையும் சகோதரியையும் அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி வழங்கிய தீர்ப்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி. அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.


