அஞ்சாமை – விமர்சனம்!

அஞ்சாமை – விமர்சனம்!

றிமுகப்படுத்திய காலம் தொடங்கி அண்மை வரை சர்ச்சையை ஏற்படுத்திவரும் சமாச்சாரம் நீட். நாடு முழுவதும் இந்த நீட் தேர்வால் தொடரும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன், பைரவி என 32க்கும் அதிக மாணவ/மாணவிகள்கள் தற்கொலை! ஆண்டுக்கு 58,000 கோடி என்ற விகிதத்தில் கோச்சிங் சென்டர்களின் கொள்ளைக்காகவே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன! இதை எல்லாம் கவனத்தில் கொண்டு ஏழை எளிய மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு அவசியமா? அதனால் நடக்கும் குளறுபடிகளால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்ற மையக்கருத்தை வைத்து உருவாகி இருக்கிறது அஞ்சாமை திரைப்படம். ஆனால் ஏதேதோ காரணங்களால் படம் சொல்ல வந்த விஷயத்தைக் கோட்டை விட்டு விட்டதென்னவோ நிஜம்

திண்டுக்கல் டிஸ்ட்ரிக்கில் இருக்கும் ஒரு வில்லேஜில் விதார்த், வாணி போஜன் தம்பதியினர் மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாடக நடிகராக இருக்கும் விதார்த் தன்னைப் போலவே தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தன் சொத்து சுகத்தை எல்லாம் விற்று மகனை படிக்க வைக்கிறார். அந்த மகன் கார்த்திக் மோகன் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதன் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவருக்கு தான் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படிக்கிறார். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என்ற விஷயம் அவர்களுக்கு தெரிய வர மகன் கார்த்திக் மோகனை மிகப் பெரிய இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து நீட் கோச்சிங்கில் படிக்க வைக்க கையில் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து ட்யூஷன் படிக்க வைக்கிறார் விதார்த். இதற்கிடையே மகனும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ய அவர் நீட் தேர்வுக்காக அந்த இன்ஸ்டிடியூட் மூலம் விண்ணப்பிக்கிறார். இவருக்கு தேர்வு மையம் ஜெய்பூரில் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு பசி, தூக்கம் என்று பாராமல் கையில் சிறிது பணத்துடன் தந்தை விதார்த்தும், மகன் கார்த்திக் மோகனும் ரயிலில் ஜெய்ப்பூருக்கு விரைகின்றனர். அங்கே பல்வேறு சிக்கல்களும், கொடுந்துயரங்களும் நடந்தேறுகிறது. அதனால் வெகுண்டு எழும் மாணவன் கார்த்திக் மோகன் நீட் தேர்வு அதிகாரிகளின் குளறுபடிகள் தான் காரணம் என்று போலீஸ் & வக்கீல் ரகுமான் உதவியுடன் தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து நியாயம் கிடைத்ததா, இல்லையா? என்பதே கதை..!

நாயகன் விதார்த் ஏழை விவசாய குடும்பத்தின் அப்பாவாக அப்படியே கண்முன் வாழ்ந்திருக்கிறார். சர்க்கார் என்ற தெருக்கூத்து கலைஞராக விதார்த் வித்தியாசமான வேடமேற்று இருக்கும் இவரின் எதார்த்த நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக தந்தைக்கும் மகனுக்குமான இவரது கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மிக மிகச் சிறப்பாக நடித்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. குறிப்பாக முதல் பாதியிலேயே இவரது கதாபாத்திரம் முடிந்து விடும்படி இருந்தாலும் தான் இருக்கும் வரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை மிக மிக சிறப்பாக செய்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் ரகுமான். முதல் பாதையில் போலீஸ் ஆகவும் இரண்டாம் பாதியில் வக்கீலாகவும் அவதாரம் எடுக்கும் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர் மாணவர்கள் மேல் காட்டும் கரிசனம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன் ஆக்டிங்கில் டிஸ்டிங்சன் பெற்றிருக்கிறார். கோர்ட்டில் சாட்சி கூண்டில் நின்று தன் தந்தை இறக்க யார் காரணம் என்பதை அவர் கண்ணீர் மல்க சொல்லும் போது மனது கனக்கிறது.

ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. அத்துடன் பின்னணி இசை கொஞ்சமும் படவோட்டத்துடன் ஒட்டவே இல்லை. கார்த்திக் ஒளிப்பதிவு பெட்டர்.

மொத்தத்தில் ஓர் அரசுப் பள்ளி மாணவன் தனது டாக்டர் கனவை அடைய, ‘தகுதித் தேர்வு’க்கு எத்தனை அழுத்தங்களுடன் தயாராக வேண்டியிருக்கிறது, ‘கோச்சிங் சென்டர்’ அதற்கான பணம், பெற்றோர்களுக்கான பொருளாதார நெருக்கடி, கடைசி நேர பதற்றங்கள், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வட மாநிலங்களில் ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் என பல்வேறு பிரச்சினைகளை பேச முயன்று இருக்கும் அஞ்சாமை டீம் அதனை திரைமொழியில் சொல்லும் போது நாடகப்பாணி துளிர்விடுவதால் முழுமையாக சீன்களை கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. ஏகப்பட்ட புள்ளி விவரங்களோடு உருவான. உண்மையான நிகழ்வை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும், கோர்ட்டில் ரகுமான் ஒப்பிக்கும் வசனங்களால் படமே அந்நியமாகி விடுவதுதான் சோகம்.

மார்க் 2.5/5

error: Content is protected !!