ஆந்திரா ; சந்திரபாபு நாயுடு மகன் அமைச்சரானார்!
ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகிக்கிறார். இந்நிலையில் ஆந்திர அமைச்சரவை நேற்று பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் சட்ட மேலவை நியமன எம்எல்ஏ.வுமான நாரா லோகேஷுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அத்துடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறிய சுஜே கிருஷ்ண ராவ், பூமா அகிலா பிரியா உட்பட 4 எம்எல்ஏ.க்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 6 பேர் அமைச்சர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந் துள்ளது. அதே சமயம் ஐந்து பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, சித்தூர் எம்எல்ஏ போஜலா கோபால கிருஷ்ண ரெட்டி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்ப்பை தெரிவித் துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் ஒரு நகலை முதல்வருக்கும் அனுப்பி உள்ளார். இதற்கிடையில், போஜலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை விளக்கியதாக கூறப்படுகிறது. எனினும், கட்சியில் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


