32°C

மலிவு விலை ஆடை ஃபேஷனுக்கு முற்றுப்புள்ளி: பிரான்ஸின் அதிரடி ‘ஆடை தடை’ சட்டம்!

admin Published: June 30, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

டை வடிவமைப்பு மற்றும் நாகரிகத்தின் உலகளாவிய தலைநகரமாகத் திகழும் பிரான்ஸ், விண்வேகத்தில் வளர்ந்து வரும் மலிவு விலை ஆடை கலாச்சாரத்திற்கு (Ultra-Fast Fashion) முற்றுப்புள்ளி வைக்க அதிரடி சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் கொடிகட்டிப் பறக்கும் ஷெய்ன் (Shein) மற்றும் டெமு (Temu) போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் அபரிமிதமான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் (ஜூன் 29, 2026 அன்று) தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டுகால நீண்ட விவாதங்கள், நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுடனான சமரசக் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இரண்டு முக்கிய விதிகள்: எது ‘அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபேஷன்’?

இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து ஆடை நிறுவனங்களும் தண்டிக்கப்பட மாட்டாது. எவை சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனவோ, அவை மட்டுமே துல்லியமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக இரண்டு முக்கிய அளவுகோல்கள் (Two-pronged test) சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன:

  1. அளப்பரிய தயாரிப்புப் பட்டியல்: சந்தையில் ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான, தினசரி ஆயிரக்கணக்கில் புதிய ஆடை வடிவமைப்புகளை (Distinct styles) அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள்.

  2. மலிவு விலை மற்றும் பழுதுபார்க்கும் செலவு: விற்கப்படும் ஆடைகளின் விலை மிகக் குறைவாக இருக்க வேண்டும். அதாவது, அந்த ஆடை கிழிந்தாலோ அல்லது பழுதானாலோ அதைத் தையல்காரரிடம் கொடுத்து பழுதுபார்ப்பதற்கான செலவு, புதிய ஆடை வாங்கும் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த விதிகளின்படி, ஐரோப்பாவின் பாரம்பரிய ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ நிறுவனங்களான ஜாரா (Zara), ஹெச் அண்ட் எம் (H&M) போன்றவை தப்பித்துக்கொள்ளும் என்றும், ஷெய்ன், டெமு, அலிஎக்ஸ்பிரஸ் (AliExpress) போன்ற ஆசிய நிறுவனங்கள் மட்டுமே இதன் பிடிக்குள் வரும் என்றும் பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் செர்ஜ் பாபின் தெரிவித்துள்ளார்.

ஆடை ஒன்றுக்கு ரூ.2,000 வரை அபராதம் (Eco-Tax)

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த மலிவு விலை ஆடைகளின் உற்பத்தியைக் குறைக்க பிரான்ஸ் அரசு கடுமையான நிதியியல் அபராதங்களை விதிக்கவுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆடைக்கும் சுற்றுச்சூழல் அபராதம் (Eco-tax) விதிக்கப்படும். இது ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆடைக்கு அதிகபட்சமாக 20 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை) அபராதமாக வசூலிக்கப்படும். எனினும், இந்த அபராதம் அந்த ஆடையின் வரிவிதிப்பிற்கு முந்தைய விலையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை, பிரான்ஸ் நாட்டின் துணி மறுசுழற்சி (Recycling) மற்றும் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.

விளம்பரங்களுக்குத் தடை மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்களுக்குக் கடிவாளம்

அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபேஷன் நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தைப் பெருக்குவதற்குக் கையாளும முக்கிய ஆயுதம் சமூக ஊடக விளம்பரங்கள் தான். அதற்கு இந்தச் சட்டம் பெரிய அணை போட்டுள்ளது.

  • முழுமையான விளம்பரத் தடை: இந்த நிறுவனங்கள் பிரான்ஸ் நாட்டில் எந்த வடிவிலும் ஆடம்பர விளம்பரங்களைச் செய்யக் கூடாது.

  • இன்ஃப்ளூயன்ஸர்களுக்குத் தடை: சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ‘இன்ஃப்ளூயன்ஸர்கள்’ (Social Media Influencers) பணம் வாங்கிக் கொண்டு இந்த பிராண்டுகளின் ஆடைகளை விளம்பரப்படுத்தக் கூடாது. இந்த விதியை மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 1,00,000 யூரோக்கள் (சுமார் ரூ.90 லட்சம்) வரை அபராதம் விதிக்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • கட்டாய விழிப்புணர்வு வாசகம்: இந்த நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் செல்லும் பிரெஞ்சு வாடிக்கையாளர்களுக்கு, “ஆட நுகர்வைக் குறைப்போம், மறுபயன்பாடு செய்வோம், ஆடைகளைப் பழுதுபார்த்து உடுத்துவோம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்களை முகப்புப் பக்கத்திலேயே கட்டாயமாகக் காட்ட வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புப் பாதுகாப்பு

உலகளாவிய பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உமிழ்வில் ஆடை மற்றும் ஜவுளித் துறை மட்டும் சுமார் 10 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. ஷெய்ன் போன்ற நிறுவனங்கள் வாரத்திற்கு லட்சக்கணக்கான புதிய ஆடைகளை மிக மலிவான பாலியஸ்டர் துணிகளைக் கொண்டு தயாரித்து, விமானம் மூலம் உலகெங்கும் அனுப்புகின்றன. இது மிகப்பாரிய அளவில் கார்பன் உமிழ்வையும், டன் கணக்கிலான ஆடைக்கழிவுகளையும் உருவாக்குகிறது.

மறுபுறம், இந்த சீன நிறுவனங்களின் மிகக் குறைந்த விலைப் போட்டியால் பிரான்ஸ் நாட்டின் உள்ளூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து, மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவுமே இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் அமைப்புகள் பாரம்பரிய ஃபாஸ்ட் ஃபேஷன் பிராண்டுகளையும் இதில் சேர்த்திருக்க வேண்டும் என்று விமர்சித்தாலும், ஐரோப்பாவிலேயே ஆடைத் துறைக்கு எதிராக இயற்றப்பட்ட மிகக் கடுமையான முதல் சட்டம் இது என்பதால் உலக அரங்கில் இது உற்றுநோக்கப்படுகிறது.