இதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்!

இதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்!

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தனி கவனம் செலுத்தும் சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய அரசின் செயலால் தங்கள் பணிகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது.

உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி வரும் ஒரு அரசு சாரா அமைப்பாக அம்னெஷ்டி இண்டர்நேஷ்னல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் செயல்பட்டு வரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக மத்திய அரசு குற்றஞ் சாட்டியது. அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என அரசு கூறியதோடு அந்த அமைப்புக்கு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் சமீபத்தில் மத்திய அரசு முடக்கியது.

இந்நிலையில் இந்தியாவில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனக்கூறி இந்தியாவில் தனது செய்ல்பாடுகளை நிறுத்துவதாக அம்னெஷ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தங்கள் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது செப்டம்பர் 10ஆம் தேதிதான் தெரியும் என்றும், இதன் காரணமாக அதன் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது. இந்திய அரசின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்னெஸ்டி அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டடி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவின் செயல் இயக்குநர் அவினாஷ் குமார், “அண்மையில் டெல்லி கலவரத்தின் காவல்துறையின் பங்கும் மற்றும் டெல்லி கலவரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டோம். நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதனை அடுத்து தொடர்ந்து எங்களை பல்வேறு வழிகளில் அரசு துன்புறுத்தி வருகிறது,” என குற்றஞ்சாட்டி உள்ளார்.

Related Posts

error: Content is protected !!