மல்லிகை ; மயங்க / மயக்க மட்டுமல்ல ; மருத்துவ பயனும் கொண்டதாக்கும்!

மல்லிகை ;  மயங்க / மயக்க மட்டுமல்ல ; மருத்துவ பயனும் கொண்டதாக்கும்!

நம் மகளிருக்கு(ம்) மிகவும் பிடித்த மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள். இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர். மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது. ஆம்.. குறிப்பாக மல்லிகை மணம் நிறைந்தது. தலையில் சூடத்தக்கது என்பது மட்டும் இன்றி அதன் மலர், இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த மலர்கள் பல வகைப்பட்டாலும் ஏறத்தாழ அனைத்து பூக்களிலும் குணங்கள் ஒன்றாகவே உள்ளது. வாசம் தரும் பூக்களை பெண்கள் தலையில் வைத்துக்கொண்டோ அல்லது தலையணை யின் அடியில் வைத்தாலும் இதன் மணம் தம்பதிகளிடையே உள்ள மன இறுக்கத்தை போக்கி பாலின உணர்வுகளை தூண்டக்கூடியதாக உள்ளது. இது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்வ தென்றால் இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பேட்ச் என்பவர் தனக்கான எம் பி பி எஸ் படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவு களை உண்டு பண்ணியும் வந்ததால் ஹோமியோ பதி மருத்துவம் பயின்றார். பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம்  மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தால் நோய்களைக் குணப்படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார். அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு  பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தார். அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார்.

இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும். இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போமா?.
மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர். மல்லிகை என்றாலே முன்னரே குறிப்பிட்டது போல் அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித்தருகிறது.

இந்த மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப்போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின் மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும். தேங்காய் எண்ணெய் – 100 மி.லி. உலர்ந்த மல்லிகைப்பூ – 5 கிராம் கறிவேப்பிலை -10 இலை எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மேலும் இந்த மல்லிகை பூக்களை பயன்படுத்தி தூக்கமின்மையை போக்கும் மருந்தும் செய்யலாம். தேவையான பொருட்கள்:மல்லிகை பூ, பனங்கற்கண்டு பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது மல்லிகை பூவை போட்டு அதன் மீது பொடித்து வைத்துள்ள பனங்கற்கண்டு பொடியை தூவவும். இதே முறையில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக போட்டு அந்த பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியால் மூடி இறுக கட்டி அதை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் வைத்து வர அது குல்கந்து பதத்திற்கு வரும். இதனை நன்கு கிளறி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு படுக்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்ைன தீரும். இதனை சிரப்பாகவும் குடித்து வரலாம்.

சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டை தவிர்த்து வெறும் மல்லிகையை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவரலாம். இனி மல்லிகை இலையை பயன்படுத்தி பொடுகை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மல்லிகை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: தேவையான மல்லிகை இலையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு பங்கு விழுதுக்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் இந்த விழுதை போட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு கிளறி கொதிக்க விடவும். நல்ல தைல பதம் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் இதனை தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து சீகக்காய் போட்டு குளித்துவர பொடுகு பிரச்னை நீங்கும். படை, சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இந்த எண்ணெய் அமைகிறது. காது வலி, சீழ் வடிதல், பூஞ்சை காளான் பிரச்னைகளுக்கும் இந்த எண்ணெயில் 2 சொட்டு விட எளிய தீர்வு கிடைக்கும். இப்படி அபரி மிதமாக மருத்துவ பயன்களை கொண்டுள்ள இயற்கையின் கொடையான மல்லிகையை பயன்படுத்தி பயன்பெறுவோம்.

error: Content is protected !!