June 2, 2023

ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு!

இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷ(ய)மாக காற்று மாசுபாடு உள்ளது. காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன. இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. காற்று மாசுபாட்டின் விளைவானது மிகவும் மோசமானது. ஏனெனில் காற்றானது மாசுபடும்போது அதிவிரைவாக விரைந்து பரவி எல்லா இடங்களிலும் உள்ள காற்றினை மாசடையச் செய்கிறது. எனவேதான் காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிக வேகமாக பாதிக்கின்றன. இதனிடையே இந்தியத் தலை நகர் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுப்பொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. வாகனங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

காற்றின் தரத்தை அளக்கும் ‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ (AQI) கணக்குப்படி, காற்று மாசு 400 என்ற அளவையும் தாண்டியுள்ளது. இந்த அளவு 150-ஐத் தாண்டினாலே உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். 400 என்பது, அபாயகரமான சூழல். உயிரினங்களின் அத்தியாவசியமான காற்றை நஞ்சாக்கிய பொறுப்பு நம்மையே சாரும். ஆறு ஓடும் நீர்வழிகளில் கட்டடங்கள் கட்டுவது, பிளாஸ்டிக் பயன்பாடு, மிக அதிகமாக வெளியாகும் வாகனப்புகை… போன்றவற்றால் நஞ்சாகிக்கொண்டிருக்கிறது காற்று. டெல்லியில் மட்டும்தான் இந்தநிலை என்று கூறி பிற மாநிலங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. தமிழ்நாட்டையும் மிக மோசமான காற்று மாசு பாதிக்கும் நிலை வந்து விட்டது. ஆனாலும் டெல்லியில் காற்று தர குறியீடு 500-க்கும் மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நேற்று வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதுபோல் ஆசியா முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் தரம் எப்படி உள்ளது  தெரியுமா?>

பெய்ஜிங் நீண்ட காலமாக அதன் புகைமூட்டம் போல் சூழந்த காற்று மாசால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் நகரங்கள் மோசமான காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ.க்யூ ஏர்விஷுவல், உலகளவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் குழு மற்றும் கிரீன்பீஸ் ஆகியவற்றின் ஆய்வின்படி உலகின் மிக மாசுபட்ட காற்று உள்ள 30 நகரங்களில் 22 இந்தியாவில் உள்ளன என கூறி உள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரங்கள் சராசரி ஆண்டு பிஎம் 2.5 ஆல் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடுகளைப் பார்க்கும்போது, வங்கதேசமே மிக மோசமான காற்றைக் கொண்டு உள்ளது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பின்னர் இந்தியாவும் உள்ளன. இந்த தரவரிசை அனைத்தும் ஆண்டுக்கு சராசரி காற்றின் தரத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

நகர்ப்புறங்களில் மாசுபாடு பொதுவாக வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் போக்குவரத்து, எரிபொருள் எரியும் மின் நிலையங்கள் மற்றும் கனரக தொழில்கள் ஆகும்.

இந்தியாவில் இருந்து சீனாவை வேறுபடுத்துவது என்னவென்றால், விவசாயிகள் தங்கள் வயல் களை இலையுதிர்காலத்தில் அழிக்க விரும்பும் போது விவசாய வயல்களில் வைக்கோல்களை எரிப்பது பொதுவாக நடைபெறுகிறது. இதனால் காற்றில் அதிக மாசு கலக்கிறது.

ஆனாலும் உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, ஓர் ஆண்டுக்கு 4.6 மில்லியன் (46 லட்சம்) பேர் சுவாசப் பிரச்னை காரணமாக இறக்கிறார்கள். அவர்களில், இந்தியாவில் மட்டும் 5,27,700 மக்கள் இறக்கின்றனர். 80 சதவிகித நுரையீரல் பாதிப்புகளுக்கு கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் வெளியிடும் புகைதான் காரணம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.