June 2, 2023

ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தபோது அவரது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தது. இதனை அடுத்து அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் இல்லை என்று கூறி, அப்பல்லோ மருத்தவமனை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், சுப்ரீம் கோர்ட் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டது.

சுப்ரீம்ஜ் கோர்ட் உத்தரவின்படி மருத்துவக் குழுவை விரைவில் பரிந்துரைக்க வேண்டும் என ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்துள்ளது.

இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின் அடுத்தகட்டம் தொடர்பாக, 16 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.