அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை!

அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை  ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை!

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக என்னு மாபெரும் கட்சி ஒற்றை தலைமை என்றொரு தீர்மானம் கொண்டு வந்ததற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை கட்சியில் இருந்துநீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், ஐகோர்ட்டும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண்ணிடப்பட்டு விட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நான்கு ஐந்து மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. மக்களிடமும் கட்சியினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இதை ஏற்கக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், “எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுவீர்கள்” என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் , பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், ஒ.பன்னீர்செல்வத்திற்கு இந்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அதிமுக என்ற நாமகரண்த்தை பயன்படுத்தி பந்தாவாக வலம் வந்த பன்னீர்செல்வத்திற்கு மேலும் ஒரு அடியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோர்ட்டில் தோல்வி அடைந்த நிலையில், இந்த முறையும் தடை விதிக்கப்பட்டு இருப்பது பன்னீர்செல்வத்திற்கு பின்னடவை ஏற்படுத்தி விட்டது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!