அடியே – விமர்சனம்!

அடியே – விமர்சனம்!

டைம் ட்ராவல்’ என்ற வாரத்தையே பலரும் வியக்கும் ஒரு சொல். அதிலும் சமீப காலங்களில் மக்களிடையே இந்த டைம் ட்ராவல் பற்றிய திரைப்படங்களையும், குறிப்புகளையும் தேடி கண்டுபிடித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும் அதிகரித்த வண்ணமிருக்கிறார்கள்.. டைம் டிராவல் சாத்தியம் என்று பல விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும் அதை ஏற்க மறுக்கும் நம் மனது அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்க்க தவறுவதில்லை. இச்சூழலில்தான் டைம் டிராவல் டைப் படமாக வந்து கவர முயன்றுள்ளது ’அடியே’.!

அதாவது வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் சோகங்களால்,சூசைட் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஹீரோ ஜிவி பிரகாஷுக்கு டிவியில் ஒலித்த ஒரு குரல் புதிய நம்பிக்கையைத் தருகிறது. அதன் மூலம் தன் பழைய காதலியை மீண்டும் சந்திக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.. அந்த பெண்ணுக்கு இவரைத் தெரியாது என்கிற நிலையில் தன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடிக்கிறார். அதற்கான வேளைக்குக் காத்திருக்கும் நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைந்து விடுகிறார். கண் விழிக்கும் போது இன்னொரு உலகத்தில் இருக்கிறார். இதே சென்னைதான் – ஆனால் அது மெட்ராஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இதுவரை பார்த்திராத விந்தைகள் எல்லாம் நடக்க, ஹீரோவுக்கு தெரிந்த எல்லோருமே வேறு பெயரில் அல்லது உருவில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் நாயகன் ஜிவி பிரகாஷ் யாரைக் காதலித்தாரோ அவரே அவருக்கு மனைவியாக தற்போதுஇருக்கிறார். ஆனால் இது உண்மையா பொய்யா என்று மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகும் நேரத்தில் திடீரென்று மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்க, அங்கே தன் காதலி, நண்பனின் காதலியாக இருக்க… இந்த இரு வேறு உலகக் குழப்பக் கதைகள் என்ன ஆகின்றன என்ற கிளைமாக்ஸூடன் முடிவதே அடியே.. கேட்கும் போது கொஞ்சம் சிக்கலான கதையோ என்று யோசிக்க வைக்கிறதுதான். ஆனாலும் அதை சுவாரசியத்தோடு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள்..

ஸ்கூல் ஸ்டூடண்டாகவும், யங் மேனாகவும் டபுள் ரோலிலும் வரும் ஜிவி பிரகாஷ் இதுவரை அவர் வந்து போன படங்களை காட்டிலும் இதில் நடிக்க ஆசைப்பட்டு அதற்காக பிராக்டிஸ் எல்லாம் செய்து உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. . காதலை சொல்ல முடியாத விரக்தியின் உச்சம், தன்னைச் சுற்றி நடப்பதென்ன என்று குழம்பும் மனநிலை, காதலிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இதேபோல் ஹீரோயினாக வரும் கௌரி கிஷன் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். இனி இவரை ‘96 படத்தின் குட்டி த்ரிஷா’ என சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க அதீத அழகுடனும், இயல்பான நடிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.

ஜீவியின் நண்பர்களில் வழக்கம்போல ஆர் ஜே விஜய் கலாய்ப்பதில் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் ஆகவும் அவர் வருவது ரசிக்க வைக்கிறது. அதேபோல் ஜீவியின் இரண்டாவது உலகத்தில் கௌதம் மேனன் ஆக வெங்கட் பிரபு வருவதும், அவரே வெங்கட் பிரபுவை நக்கல் அடித்துப் பேசுவதும் செம ரகளை. வசனத்தில் கூட எப்படியாவது பிரேம்ஜியைக் கொண்டு வந்துவிடும் டெக்னிக் சூப்பர்.

கோகுல் பினோய் கேமரா ஓர்க் சூப்பர். ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், இசையில் அமைந்த பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருகிறது . என்றாலும் பேரல்லல் யூனிவர்ஸ் என்றால் என்ன என்பதை வெங்கட் பிரபு விளக்கும் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையால் சப்ஜெக்ட் புரியாமல் போய் விடுகிறது.

மேலும் சொல்லும் கதையின் முதல் பாதியில் இருந்த அந்த திரைக்கதை சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங், இரண்டாம் பாதியில் பேரலல் யுனிவர்ஸ் என்பதை புரிய வைக்க முயற்சி செய்து மொத்தமாக குழப்பி விட்டனர்..ஆனாலும் புது டைப்பில் இரண்டாம் உலகத்தில் நடக்கும் மாறுதல்களை காமெடியாகக் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைப்பதோடு, லவ்வர்ஸ்களை மறுபடியும் பார்க்க வைக்கும் ட்ரிக் இருக்கிறது..!

மொத்தத்தில் அடியே – பிரியம்!

மார்க் 3/5 .

error: Content is protected !!