ஆதித்ய வர்மா – விமர்சனம்!

ஆதித்ய வர்மா – விமர்சனம்!

டீன் ஏஜ் எனப்படும் பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளையும் கொந்தளிப்பு மிக்கதாய் ஆக்கி விடுகிறது. துள்ளித் திரிந்த இளசுகள் பருவமெய்யும் போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் சக இளைஞர், இளைஞிகளாலும் கூட தினமும் அவர்கள் தொல்லைகளை , புதிய சவால்களை எதிர் கொள்கிறார்கள். டிவி, சினிமா, இசை, இன்டர் நெட் ஆகியவற்றின் ராட்சச வலையில் எந்நேரமும் வீழ்ந்து கிடப்போரின் வாழ்க்கை எப்படி சீரழிந்து  போகிறது என்பதை தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, இந்தியில் ஷாஹித் கபூர் போன்ற அனுபவம் மிக்க நடிகர்கள் மூலம் சொல்லி இருந்த கதை கொஞ்சம் எல்லை மீறியதுதான். ஆனாலும் அதை ’சின்ன சீயான்’ துருவ் மூலம் பரதேசி பாலா  தமிழில் சொல்ல முயன்று தோற்று அது சர்ச்சையான போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ என்னும் சவாலான இளைஞன் கேரக்டரை  அசால்டாக ஹேண்டில் செய்து  ஆதித்யா வர்மா- வாக வாழ்ந்துக் காட்டி அசத்தி  ஸ்கோர் செய்து இருக்கிறார் துருவ் விக்ரம். முழுக்க முழுக்க அடல்ஸ் ஒன்லி-யான இந்த ஆதித்ய வர்மா  படத்தின் மூலம் கோலிவுட், டோலிவுட் தாண்டி பாலிவுட்-டுக்கும் ஒரு பக்கா கமர்சியல் ஹீரோ கிடைத்து விட்டார் என்பது மட்டுமே உண்மை.

ஆ. வ. கதை என்னவென்று கேட்டால் வளரும் சமுதாயத்தில் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான்.. அதாவது மெடிக்கல் காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்டான துருவ் விக்ரமுக்கு, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டான பனிட்டா ஷெட்டி-யைக் கண்டதும் பச்-சக்கென்று காதல் பற்றி கொள்கிறது. காதல் வந்தவுடன் ஃபாலோ பண்ணுவது, கெஞ்சுவது, டூயட், வழியல் என்ற வழக்கமான வழியை மறந்து நேரடியாக நெஞ்சுருக்கக் கட்டிப் பிடித்து லிப் கிஸ் அடித்து காதலை வெளிப்படுத்தும் துரு-வை, பனிட்டாவுக்கும் பிடித்து விடுகிறது. அதை அடுத்து லிவ் டூ கெதர் லைஃப்-புக்குள் போய்  மனமொத்து ஆடையின்றி பலநாட்கள் கழிக்கும் அளவு போகிறது.

இப்படி படிக்க போன பெண் படுக்கை அறையில் பாடம் படிப்பதை லேட்டாக தெரிந்த நாயகி பனிட்டா வின் அப்பா தன் மகளுக்கு தன் ஜாதி பையன் ஒருவனுடன் திடீர் திருமண ஏற்பாடு செய்து விடுகிறார். வாழ்க்கையின் சுயிங்கம்மாக இருந்த பனிட்டா-வின்  பிரிவைத் தாங்க முடியாமல், போதை பொருளை பயன்படுத்தி சுழநினைவை இழக்க, அந்த நேரத்தில் பனிட்டாவுக்கு திருமணமும் நடந்து விடுகிறது. இதனால், தன் பெட் மேட்-டை (லவ்வர் என்றும் சொல்லலாம்) மறக்க முடியாமல் மேலும், மேலும் போதைக்கு அடிமையாகிறார் துருவ். அப்படி  தொடர் போதை மகனானதால் வாழ்க்கையை மொத்தமாக இழக்கும் சூழலில், மீண்டும் பனிட்டாவை – அதுவும் வாயும் வயிறுமாக சந்திக்க, அதன் பிறகு துருவின் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

மூன்று மணி நேரத்துக்கு சில நிமிடங்கள் குறைவாக உள்ள படத்தை முழுக்க தன்  முதுகில் தாங்கும் ஆதி கேரக்டரில் துருவ் விக்ரம் மிகச் சரியாக பொருந்தி இருக்கிறார். கூத்துப்பட்டறை பயிற்சிக்கெல்லாம் போகாமல் பக்கா ஹை கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த, கண் மூடித்தனமான கோபம், கண்டதும் காதல், கட்டிலில் காமக் களியாட்டம், விரக்தியில் போதை, நிலை புரிந்து சாந்தம் என சகலவிதமான சம்பவங்களுக்குமான முகபாவத்தையும், குரல் ஒலிப்பையும் மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறார். நாயகி பனிட்டா பார்வையிலேயே காமத்தைக் காட்டி உதட்டிலேயே ஒயின் பாட்டிலை ஏந்தி படுக்கை அறைக்காகவே படைக்கப்பட்டவர் மாதிரியான ரோல்.. அதை திறம்பட கிக்-காக செய்திருப்பவர் கிளைமேக்ஸில் அசத்தி விடுகிறார்.

ரதன் தன் மியூசிக் இண்டெலிஜன்ஸ் மூலம் இப்படத்துக்கு தனி மவுசு ஏற்றி இருக்கிறார், ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சிகரெட் புகையில் இருந்து அதில் விழும் நெருப்பையும், ஒரு குடிகாரனைக் கூட ரசனையோடு பார்க்கும் கோணத்தில் படமாக்கி தன் திறமையாலும் படத்தை ஒரு ஸ்டெப் உயர்த்தி இருக்கிறார் .

ஆக.,,மொத்தத்தில் ஆதித்ய வர்மா திரைப்படம் இளைஞர்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்குமான உதாரணம்தான். ஆனால், நாயகன் மூளைக் கெட்ட முரடனாக இருப்பது, எப்போதும் காமக் கொடூரனாக இருப்பது,  வேலைக்காரப் பெண்ணை ஓட ஓட துரத்துவது, நாய்க்கு நாயகியின் பெயர் வைத்து அழைப்பது, பார்க்கிற பெண்ணையெல்லாம் படுக்க அழைப்பது குடித்து விட்டு டாக்டர் டூட்டி பார்ப்பது, நர்ஸ் களே அவருக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்து சிகரெட் பிடிக்க வைப்பது,போன்ற காட்சிகளை கண் கொட்டாமல் பார்க்கும் இளசுகள் கூட்டம் இந்த சின்ன சீயான் துருவ் அடிக்கடி அடிக்கும் லிப்-லாக் காட்சிக்கும், கொகைன் உறிஞ்சும் காட்சிக்கும், கெட்டவார்த்தைகள் பேசும் சீனைக் கண்டும், கேட்டும் கைத் தட்டி வரவேற்பதைக் கண்டால் பகீரென்கிறது. படம் முடியும் போது மேற்படி பலான விஷயங்களை எல்லாம் விட்டு விட்டதாகக் காண்பித்தாலும் இதுவா இன்றைய ரியல் 2கே என்ற பீதியுடன்தான் தியேட்டரை விட்டு வெளியேற வேண்டியதிருக்கிறது.

மார்க் 3. 25 / 5

error: Content is protected !!