ஆக்‌ஷன் – விமர்சனம்!

ஆக்‌ஷன் – விமர்சனம்!

நம்ம சினிமாவின் ஆரம்ப காலத்தில் புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்த காரணத்தால் அவைகளில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. இதன் பின்னர் சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் மார்சியல் ஆர்ட்ஸ் முறையில் சண்டை அமைத்து மிகவும் குறைவான படங்களே வந்தன.. ஆனாலும் பெரும்பாலான படங்களில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் தான். எப்படி பரதம், கதகளி, ஒடிஸி என எந்த வித நடன முறையும் இல்லாமல் புதுவிதமாக சினிமா நடனம் ஒன்றை உருவாக்கினார்களோ அதுபோல ஜூடோ, குங்பூ, கராத்தே என எந்த வித முறையும் இல்லாமல் சினிமாவுக்கென தனியாக சண்டைக் காட்சிகளை அப்போது அமைத்தார்கள். ஏன் இன்றும் கூட அப்படி கலந்து கட்டித்தான் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்கள். அந்த வகையில் அமைக்கப்படும் சண்டைக்காட்சிகளில் முழு ஆக்ரோஷம், ஸ்பீட் மற்றும் பின்னணி இசைக் கோர்வை சரியாக இருக்கும் படங்களுக்கு தனி மவுசு கிடைத்து வருகிறது. அப்படியான மவுசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஷாலை வைத்து சுந்தர் சி உருவாக்கி இருக்கும் படம்தான் முழு நீள அதிரடிப் படமான ‘ஆக்சன்’. அதிலும் லண்டன், இஸ்தான்புல், பாகிஸ்தான் என நாடு விட்டு நாடு துரத்திக் கொண்டே போய் ஒத்தை ஆளாக சண்டை மேல் சண்டை போட்டு மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் படம்.

கதை என்னவென்றால் நம்ம தமிழ்நாடு முதல்வர் பழ.கருப்பையா அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம்கி, துணை முதல்வராக இருக்கிறார். இளைய புள்ளை விஷால் அரசியல் சாயம் படாமல் இருக்கும் ஆசையில் ராணுவத்தில் கர்னலாகப் பணிபுரிகிறார். இதனிடையே ராம்கியை முதல்வர் வேட்பாளராக நிறுத்திவிட்டு, அரசியலில் இருந்து விலக நினைக்கும் பழ.கருப்பையா அதை அறிவிக்க ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்து, தேசியக் கட்சியின் மூத்த தலைவர் இறந்து விடுகிறார். அந்த குண்டு வைத்த பழி ராம்கி மேல் விழுவதால் அதை தாங்கி கொள்ள முடியாத ராம்கி தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி தன் குடும்பத்தில் மேல் விழுந்த பழியைத் துடைக்கவும். தேசியத் தலைவரின் கொலைக்குப் பின்னால் இருப்பது உண்மையிலேயே யார் என்பதை பல நாடுகளுக்குப் பயணம் செய்து கண்டுபிடிப்பதுதான் ஸ்டோரி(யாம்)..

விஷால் நடித்த படங்களில் பெரும்பாலும் ஆக்ரோசமான கேரக்டர்களிலேயே நடித்தவர் என்பதால் இந்தப் படத்தில் அவரின் அதிரி புதிரியான அடிதடி சீன்களெல்லாம் கேஷூவலாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நாட்டின் பிரதமராக வர சான்ஸ் இருந்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தை, ராணுவத்தில் கர்னலாக இருக்கும் ஒருவர் தனிப்பட்ட முறையில் விசாரிக்கட்டும் என்று பர்மிஷன் கொடுப்பதும், அதை ஏற்று சக மிலிட்டரி கேர்ஸ் தம்ன்னா-வை தோளில் தூக்கிக் கொண்டு(?) விஷால் ஆரம்ப பேராவில் சொன்ன சில பயங்கரவாத நாடுகளுக்குள் அசால்ட்டாக போய், அங்குள்ளக் கம்ப்யூட்டர்களை ஜஸ்ட் லைக் தட் ஹேக் செய்து, வில்லன்களை கண்டறிந்து சர்வசாதாரணமாக தூக்கிக் கொண்டு நாடு திரும்பதெல்லாம் சற்று ஓவராகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தப் படத்துக்காக ஓவர் ஓர்க் செய்துள்ள விஷாலைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாயகிகள் இரண்டு பேர் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி. இதில் தமன்னா கவர்ச்சி டிரஸ் போட்டுக் கொண்டு வந்து விஷாலுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் கவர்ச்சியை தூக்குகிறார்.. காதல் காட்சிகளில் அழகிய பாவங்களை முகத்தில் கொண்டு வரும் தமன்னா சண்டைக் காட்சியின் போது ஒரே மாதிரியான பாறாங்கல் முகத்தை காட்டுவதுதான் ஏனென்று புரியவில்லை. ஐஸ்வர்யா லட்சுமி ரசிக்க வைக்கிறார். வில்லியாக வரும் அக்கன்ஷா தனி ஸ்கோர்ச் செய்கிறார்.

அரசியல்வாதியாக இருந்தாலும் எதார்த்தமான நல்ல மனிதராக கொஞ்ச நேரமே வந்து நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு செல்கிறார் ராம்கி.. பில்டப் அளவுக்கு அதிகமாக கொடுத்து அறிமுகமாகும் தீவிரவாதி கபீர் துகான் சிங் ரோல் காற்றில்லாத பலூன் மாதிரி இருந்தது.

சண்டைக் காட்சிகளுக்கு இணையான ஷார்ப் வசனங்கள் பத்ரி-யாம்.. சாம்பிளுக்கு:

“அவன் வந்தா ஆப்சன் இல்ல… ஆக்சன் தான்… ” ,

” அவ என் பல்ல பாக்கல, ஸ்கில்லா பாத்துட்டா… “,

” ஓட்டுப் போட்ட கறையே ஒரு வாரத்துல போயிடும்… முத்தம் கொடுத்த கறை மூனு மாசமா போகமா இருக்குமா… ” ,

” கருப்பான பசங்களுக்குத் தான் செம பீஸா மாட்டும் போல இருக்கு… “,

” நெருப்ப அப்பறமா அணைக்கலாம்னு விட்றக் கூடாதுப்பா… “,

” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு… ஆனா தொரத்துறவனுக்கு ஒரு வழி தான் இருக்கு… ” ,

” உன் ஹைட்டுக்கு ரெண்டே ஸ்டெப்புல இந்தியா போயிடலாம்… “,

” ஒனக்கு ஒருத்தி கிடைக்கலன்னு பிரச்சினை… எனக்கு ஒருத்தி கூட கிடைக்கலன்னு பிரச்சினை “,

” ஹேக்கர ஜோக்கர் ஆக்கிட்டிங்களேடா… ”

” இந்த நக்கல் பேச்சுக்குத் தான்டா எந்த தமிழனுக்கும் நான் உதவறது இல்ல… ” ஆகிய டயலாக்குகள் ஒவ்வொன்றுக்கும் அப்ளாஷ் விழுகிறது.

டைட்டில் காட்சியை வலுவூட்ட மெனக்கெட்ட அன்பறிவ் -வுக்கு ஒரு பூங்கொத்து. அதிலும், இடை வேளை யின்போது வரும் சண்டைக் காட்சி, அசத்தல். டட்லியின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் ஆதியின் இசையும் மோசமில்லை ரகம்தான்

ஆனால் டைட்டிலும் எப்படி எல்லாம் சண்டைக் காட்சிகள் வைக்கலாம் என்று மட்டும் யோசித்த இயக்குநர் சுந்தர் சி கதை குறித்து தனிக் கவனம் செலுத்தாதது ஏமாற்றம்தான்

மொத்தத்தில் ஆக்‌ஷன் – ஆஃபாயில்

மார்க்  3 / 5

Related Posts