தமிழ் குரல் / AI Voice
நம் தமிழ் சினிமாவில் கே. எஸ் கோபாலகிருஷ்ணன் என்றொரு டைரக்டர் இருந்தார். அவர் பெரும் பாலும் குடும்ப விஷயங்களை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் சகல தரப்பினராலும் பார்க்கப் பட்டு ரசிக்கப்பட்டது. அவருக்கு பிறகு கே. பாலச்சந்தர், விசு போன்றோர் எடுத்த ஃபேமிலி சப்ஜெக்ட் – டுகள் வந்து கவர்ந்தது இப்போது அருகிப் போய் விட்ட நிலையில் வெளி வந்திருப்பதுதான் தாமிராவின் ‘ஆண் தேவதை’. தற்போதைய உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழும் சூழ்நிலையில் இன்றைய நகர வாழ்க்கையில் நடுத்தரம் வர்க்கம் என்று சொல்லப்படும் இரண்டுங் கெட்டான் ஜோடி ஒன்று குடும்பம் என்ற பெயரில் ஒரே வீட்டில் வசிக்கும் போது ஏற்படும் பிரச்னையும், குழப்பமும், நிஜ நடப்பும்தான் இந்த ஆண் தேவதை.
கதை என்னவென்று கேட்டால் மெடிக்கல் ரெப் சமுத்திரக்கனிக்கும் , ரம்யா பாண்டியனுக்கு காதல் மற்றும் திருமணம் எல்லாம் முடிந்து இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதனால் டார்கெட் ஆபீஸ் மற்றும் வீட்டு தேவைக்கான டார்கெட் வைத்து ஓடி கொண்டிருக்கிறார். அதே சமயம் எக்கச்சக்க மான சம்பளம்,சொகுசான வாழ்க்கை, குழந்தைகக்கு வசதியான பள்ளியில் கல்வி போன்றவற்றுக் காக ஆசைப்பட்டு ஐடி வேலையில் இணைகிறார். இருவருமே இப்படி வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது. இதனால் பெரிதும் குழப்பம் ஏற்பட்டு டிஸ்கஷன் செய்த பிறகு பிள்ளை களின் நலனுக்காக சமுத்திரக்கனி வேலையை விட்டு விட்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக மாறி, குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். அதே சமயம் அபரிதமாக கிடைக்கும் ஐ டி வருமானத்தைக் கணக்கு பண்னிக் கொண்டு பைக், கார் , சொந்த வீடு வாங்க வீட்டுக் கடன் என்று வாங்கி மிளிர்கிரார். அத்துடன் தனது ஆபீஸ் நட்பு வட்டாரத்துடன் பார்ட்டி, ட்ரிங்க்ஸ், டேட்டிங் என்ற லெவலில் செல்ல தொடங்குகிறார். அப்படி ஒரு நாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுதி ஒன்றில் தங்குகிறார். அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள். அப்புறம் என்னாச்சு? கடைசியில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.
செல் போனில் வாட்ஸ் அப் மூலமே குட் மார்னிங் ,குட் நைட் சொல்லும் குடும்ப உறுப்பினர்களின் போக்கையும், குழந்தைகளுக்காக தான் உழைக்கிறோம்” என்று அசால்டாக சொல்லியப்படி, பணி புரியும் தம்பதி ஒவ்வொருவருக்குமான படமிது. அத்துடன் வாழ்க்கையின் சகலப் பிரச்சினை களுக்கும் பணம்தான் தீர்வு, என்று நினைத்து தங்களை தாங்களே வருத்திக் கொள்ளுபவர்களின் நிலைமையையும் அழகாக படமாக பிடித்து பாடமாக காட்டி இருக்கிறார் கே. பாலச்சந்தரின் சிஷ்யனான டைரக்டர் தாமிரா.
‘அப்பா’ படத்தின் மூலம் தமிழக பள்ளி போக்கையும், மாணவர், ஆசிரியர் நடத்தையையும் அம்பலப் படுத்திய சமுத்திரக்கனி, இந்த ஆண் தேவதை வடிவில் கணவன், மனைவிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் அதை போரடிக்கும் வாத்தியார் போல செய்யாமல் ஒரு நண்பரைப் போல வாழ்ந்து காட்டி புரிய வைத்திருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சலிப்போ, அசூயையோ இல்லா மல் மனைவியின் புடவையை துவைப்பது, வீட்டு வேலை செய்வது, பிள்ளைகளை பார்த்துக் கொண்டு பக்கா ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக வரும் சமுத்திரக்கனி, மனைவி ரம்யா தன்னை அவமானப்படுத்தியதும் கோபப்பட்டு தனது பெண் குழந்தை யோடு வீட்டை விட்டு வெளியேறி சிரமப்படும் காட்சிகளில் நடிப்பால் நம் இதயத்தை கனக்க செய்கிறார். இந்த சமுத்திரக்கனி படத்திற்கு படம் நமக்கு அட்வைஸ் செய்தாலும், அவரது அட்வைஸ் நமக்கு எரிச்சலை தர வில்லை என்பதே பெரிய விஷயம்தான் எனினும் யாரைப் பார்த்தாலும் புது புதுக் கோணத்தில் தத்துவார்த்தமாகப் பேசும் பாணி கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. ..
அதே சமயம் ‘ “நாளைக்குங்கறது என்னைக்கும் நாளைக்காதான் இருக்கும். இன்னைக்குதான் நிஜம்” ‘நீ பார்க்குற வேலை உனக்குள்ள இருக்குற அழகான பொண்ணைக் கொன்னுடுச்சு, நீ மகிழ்ச்சியா இருக்கியா”, ”பொம்பளைங்க உடம்புக்குள்ள புதையலைத் தேடுறவங்களுக்கு புடவை துவைக்குறது தப்பாதான் தெரியும்” போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் தாமிரா கவனிக்க வைக்கிறார்.
‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியன் கொஞ்சம் நெகட்டிவ் கலந்த குடும்பத் தலைவி வேடம். அதை மிக்ச் சரியாக புரிந்து நம்மூர் சராசரி பெண்களின் மனநிலையை மிகப் பொருத்தமாக பிரதிபலிக்கிறார். குழந்தைகள் ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். சுஜா வாருணி, ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் போராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என்று படத்தில் பலரும் ஓ.கே. ரகம். விஜய் மில்டனின் ஒளிப்பதிவுடன், ஜிப்ரானின் இசையும் ஆண் தேவதையை அழகாக, ஆழமாக காட்டுகிறது.
நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்ற கேள்வி யுடன் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், அலுவலக நண்பனால் நிகழும் பாலியல் சீண்டல், அளவுக்கு மீறிய தவணை முறைக் கடனால் வரும் தொல்லைகள் என்று படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கும் படத்தில் சில லாஜிக் மீறல்கள் அல்லது நம்பகத் தனமை குறைச்சல் போன்றவை இருந்தாலும் அப்பா, அம்மா,அக்கா, அத்தை, சித்தி, மாமா, பாட்டி, தாத்தா, தம்பிகள், பாப்பா என்று சகலரையும் அழைத்து சென்று பார்க்க வேண்டிய படமிது.
மார்க் 3.5 / 5

