ஆலன் – விமர்சனம்!
நாயகன் வெற்றி குழந்தையாக இருக்கும் போதே தீ விபத்தில் குடும்பத்தை இழந்ததன் காரணமாக சென்னை மேன்ஷனில் வாழத் துவங்குபவர் ஒரு சூழலில் மனம் பாதிக்கப்பட்டு காசிக்கு போய் சன்னியாசி போல் ஜடாமுடியோடு வாழ்கிறார்.
அங்கே அவரது குரு, “நீ உன் ஊருக்கு போய் உனக்குப் பிடித்த எழுத்துடன் வாழ்” என்று சொல்லி அனுப்புகிறார். இதையடுத்து ஊருக்கு ரயிலில் வரும்போது வெளிநாட்டுப் பெண் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக வளர்கிறது.
ஒரு கட்டத்தில் அப்பெண் கொல்லப்படுகிறார். மனம் வெறுத்து மீண்டும் சன்னியாசி ஆகும் வெற்றிக்கு இன்னொரு காதல் கிடைக்கிறது. அதன் பின்னர் வெற்றியின் சன்னியாசி வாழ்க்கை என்னவாகிறது? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது ஆலன்.
தனக்குப் பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி, இப்படத்தில் சறுக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முகம் முழுவதும் தாடியை வளர்த்துக் கொண்டு இக்கதாபாத்திரத்திற்கு துளியும் பொருத்தமில்லாத ஹீரோவாக தான் தென்படுகிறார்.கண்களில் வழியும் நடிப்பு வேறு எங்கேயும் எட்டிக்கூட பார்க்கவில்லை
நாயகி மதுரா, தேவதையாக சில காட்சிகளில் வந்து சென்றார். ஒரு சில காட்சிகள் என்றாலும், மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி விட்டார் அனு சித்தாரா.வெற்றியின் அப்பாவாக நடிக்கும் அருவி மதன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் பண்பட்ட நடிப்பில் கவர்கிறார்கள்.
இந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் காசி, ராமேஸ்வரம், ரிஷிகேசம் முதலான புனிதத் தலங்களை தன் கேமராவுக்குள் சுருட்டி வந்து பயணிக்க முடியாத இந்துக்கள் தங்கள் பிறவிக் கடனை திரையில் நிறைவேற்ற உதவுகிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவும் படத்தின் தன்மை புரிந்து கொண்டு படத்தோடு ஒன்றி இசையமைத்திருக்கிறார்.
அதில் படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதனுக்கும் பங்குண்டு. படம் மெதுவாக நகர்ந்தாலும் அதுவே இந்தக் கதையின் திரை மொழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.
எழுதி டைரக்ட் செய்திருக்கும் சிவா ஆர் இப்படத்தை கவித்துவமான ஒரு காதலை சொல்ல வேண்டும் என்று எண்ணி இருக்கிறார். அதற்கான முயற்சி தெரிகிறது. ஆனால் கொஞ்சமும் ஒட்டாட சன்னியாசியை சம்சாரியாக்க முயற்சிப்பதும், எடுத்துக் கொண்ட கதைக்குரிய திரைக்கதையை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி நகர்த்தி செல்வதோடு அடுத்துத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்கும்படியான காட்சிகளும் ஆல்ன் மீதான் அக்கறையை, பிரியத்தைக் குறைத்து விடுகிறது.
மொத்ததில் ஆலன் – சின்னத்திரையில் போட்டால் நேரமிருந்தால் பார்க்கலாம்
மார்க் 1/.5/5