திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் அட்டை அவசியம்!
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சு ழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தாயார் பத்மாவதி அம்மையார்.

வழக்கமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயி ப்ரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வர இருப்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு விடுமுறை, அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவதால் 2018 ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆதார் கட்டாயம் :
வரும் ஜனவரி 2018 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும், தங்களின் ஆதார் அட்டையை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
❂ மேலும், லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


