செய்தியைக் கேட்க / Listen to News
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சர்வதேச அதிகப்படியான மருந்து பயன்பாட்டு விழிப்புணர்வு தினம் (International Overdose Awareness Day) உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருட்கள் அல்லது வீரியமிக்க மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் (Overdose) ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதும், இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும். 2026 ஆம் ஆண்டில் இத்தினம் தனது 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
25-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மையக்கருத்து
2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தீம்: “25 Years On. Still Needed.” (25 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தேவைப்படுகிறது) என்பதாகும். கால் நூற்றாண்டைக் கடந்த பின்னரும் கூட, அதிகப்படியான மருந்து பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்கள் உலகம் முழுவதும் குறைந்தபாடில்லை என்பதை இந்த மையக்கருத்து உரக்கச் சொல்கிறது. இத்தகைய மரணங்கள் முற்றிலும் தடுக்கக்கூடியவை என்றபோதிலும், உலகின் பல பகுதிகளில் இதற்கான விழிப்புணர்வும் மருத்துவக் கட்டமைப்பும் இன்னும் தேவைப்படும் நிலையிலேயே உள்ளன என்பதை இது நினைவூட்டுகிறது.

வரலாறும் அமைப்பின் பங்கும்
இவ்விழிப்புணர்வு தினம் 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. பெனிங்டன் இன்ஸ்டிடியூட் (Penington Institute) என்ற அமைப்பு இதற்கான உலகளாவிய பிரச்சாரங்களை முன்னெடுத்து நடத்துகிறது. மருந்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல், அவர்களை மீட்டெடுப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிகளை உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தடுக்கக்கூடிய மரணங்களும் நலோக்சோன் தேவையும்
மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கக்கூடியவையே. ஆனால், இது குறித்த சமூகக் களங்கம் மற்றும் பயம் காரணமாகப் பலரும் ஆரம்பக் கட்டத்திலேயே உதவி பெறத் தயங்குகின்றனர். நலோக்சோன் (Naloxone) போன்ற அவசரகால உயிர் காக்கும் மருந்துகள் எளிதில் கிடைக்கும் சூழலும், ஆதாரப்பூர்வமான மருத்துவ சிகிச்சைகளும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கியக் கோரிக்கையாகும்.
ஊதா நிறத்தின் குறியீடு
சர்வதேச அதிகப்படியான மருந்து பயன்பாட்டு விழிப்புணர்வு தினத்தின் அடையாள நிறமாக ஊதா (Purple) திகழ்கிறது. போதை மருந்துப் பழக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவூகூர்வதற்கும், அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுப்பதற்கும் அடையாளமாக ஊதா நிற ரிப்பன்கள் மற்றும் ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெறுப்பையும் ஒதுக்குதலையும் விடுத்து, பாசத்துடனும் மருத்துவப் அணுகுமுறையுடனும் அணுகினால் மட்டுமே பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை இத்தினம் நமக்கு உணர்த்துகிறது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்
