ஏர்ஃபோர்ஸ் பிளைட்டை கண்டு பிடிக்கும் முயற்சி தொடர்கிறது
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்ட ஏ.என்.32 விமானம் மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருப்பதாக கூறப்பட்டாலும், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தை தேடும் பணி 14-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.ரஷ்ய நாட்டை சேர்ந்த ‘இகோர் பிலோவ்ஷோவ்’ என்ற கப்பல் நட்புறவு பயணமாக விசாகப்பட்டினத்துக்கு வந்தது. இது பேரிடர் காலங்களில் கப்பல்கள் கடலில் மூழ்கினால் தேடும் பணியில் ஈடுபடுத்துவதற்காக ரஷ்ய கப்பல் படையில் இணைக்கப்பட்டது. நீரின் உள்ளே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சாதனங்கள், நீர்மூழ்கி தேடும் வாகனம், ரேடார் கருவி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் இந்த கப்பலில் உள்ளன.

இந்த ரஷ்ய கப்பல் விசாகப்பட்டினத்துக்கு செல்லும் வழியில், மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 நாட்கள் ஈடுபடுத்தப்பட்டது. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் அறியும் ‘சோனார்’ தொழில்நுட்பத்தில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாயமான விமானம் குறித்த எந்த தடயங்களும் சிக்கவில்லை.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க பாதுகாப்பு அமைச்சகம் தொடர்முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக மேலும் 2 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் வசம் உள்ள ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் ‘சமுத்ரா ரத்னாகர்’ என்ற கப்பலும், பெருங்கடல் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்துக்கு சொந்தமான ‘சாகர்நிதி’ என்ற கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
‘சமுத்ரா ரத்னாகர்’ கப்பலில் கடல் அடுக்குகளை வரைபடமாக மாற்றும் தொழில்நுட்பம், காந்தமானி, புவி ஈர்ப்பு விசையை கணக்கிடும் கருவி, தண்ணீரின் உள்ளே பயன்படுத்தப்படும் கேமரா, கடல் நீரின் திசைவேகம் அறியும் கருவி, எந்தவித காலநிலையிலும் செயல்படக்கூடிய ஜி.பி.எஸ். கருவி, ஆய்வகங்கள், ஆழ்கடலில் ஒளிக்கற்றைகள் மூலம் ஆய்வு செய்யும் கருவி என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


