💥செங்கோட்டையில் ஒரு ‘பளிச்’ சத்தம்: 56 இன்ச் துணிச்சலும், எதிர்க்கட்சிகளின் ‘புலம்பல்’ தேசபக்தியும்!
டெல்லியின் பாதுகாப்பு நிறைந்த செங்கோட்டைப் பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது சாதாரண இன்ஜின் கோளாறு இல்லையாம், வெடிபொருள் நிரப்பி செய்யப்பட்ட நாசவேலை என்கிறார்கள் செய்தியாளர்கள். பாதுகாப்புப் பகுதியிலேயா? அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் பாமரர்களான நம்மைப் போல் நாமும் பார்க்கிறோம்.
🦁 பூட்டானில் கர்ஜித்த சிங்கம்
இந்தச் சம்பவம் பயங்கரவாதிகளின் சதியாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு ஐயம் இல்லை. இருந்தாலும், நம்ம மாண்புமிகு பிரதமரைப் பாருங்கள்! ச்சே! ஒரு கார் வெடிப்புக்காகவா பதற்றம் அடையப் போகிறார்? அவரும் நம்மைப் போலத்தான் பதறணும்னு நாம நினைக்கிறதே எவ்வளவு அறியாமை! அவர் சாதாரண ஆளில்லையே, 56 இன்ச் அல்லவா!
அதனால்தான், கார் வெடித்த நிலையிலும், ‘எனக்கு இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதுபோல், அவர் முன்பே திட்டமிடப்பட்டபடி இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாகப் பூட்டானுக்குப் பறந்துவிட்டார். அவர் பூட்டானுக்குச் சென்றாலும் அவருடைய இதயமெல்லாம் இந்தியாவில்தான் கிடந்து துடித்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாதா என்ன? எனவேதான், ‘கார் வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்களைத் தப்பவிடமாட்டோம். அதன் பின்னணியிலுள்ள அனைவரும் நீதியின்முன் நிறுத்தப்படுவார்கள்’ என்று பூட்டானிலிருந்து சினம் கொண்ட சிங்கமாய்க் கர்ஜித்திருக்கிறார். நாட்டு நடப்பைப் பற்றி அங்கே இருந்தே கவனித்த துணிச்சலை நாமெல்லாம் பாராட்ட வேண்டும்!

🎯 பயங்கரவாதத்தின் இலக்கு வேறு எதுவோ?
இந்த கார் வெடிப்பு நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா? இந்த வெடிப்பு, பயங்கரவாதிகளின் உண்மையான குறி அல்ல; அப்படி இருந்திருந்தால், பலி எண்ணிக்கையும் சேதங்களும் எகிறியிருக்கும். அவர்களுடைய குறி வேறு எங்கோ இருந்திருக்கிறது. அந்தக் குறியை நோக்கிய பயணத்தில்தான் இடையில் ஏதோ பிழை நேர்ந்து விட்டதாகத்தான் நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது.
எதிர்க்கட்சிகளையே அரசியல்ரீதியாக இல்லாமலாக்கும் திறன்படைத்த ஒரு பலமான அரசுக்கு, பயங்கரவாதிகளை இல்லாமலாக்க முடியாதா என்ன? முடியும். ஆனா, பயங்கரவாதிகளைப் பணத்தாலோ அல்லது மிரட்டலாலோ பணிய வைக்க முடியாது. அதற்குத் தேவை புத்திசாலித்தனமான திட்டமிடல் மட்டும்தான். புத்திசாலித்தனத்துக்கு எங்கே பஞ்சம்?
😢 எதிர்க்கட்சிகளின் ‘அற்ப’ப்புலம்பல்
இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் திறன் எதிர்க்கட்சிகளுக்கு இல்லாமல் போனதுதான் நமக்கு வியப்பாக இருக்கிறது. அந்த அறியாமையால்தான் பாஜக அரசு எல்லாவகையிலும் தோற்றுப்போய் விட்டதாகப் புலம்பிக் கொண்டிருகிறார்கள்.
உண்மையான தேசபக்தர்கள் ஒருபோதும் இப்படிச் சோர்ந்து புலம்ப மாட்டார்கள். மாறாக, நாட்டை நிர்வகிக்கும் அரசு, எதையெதையோ தனியாரிடம் விற்றாலும், இன்னமும் நம்மையெல்லாம் யாரிடமும் விற்காமல் விட்டு வைத்திருப்பதென்பது, நம் முன்னோர்கள் செய்த புண்ணியங்கள் மட்டுமல்ல; இந்த அரசு காட்டும் இரக்கமும்தான் என்கிற மகிழ்ச்சிக் கடலில் குடும்பத்தோடு குதித்துக் கும்மாளமடிப்பார்கள் என்பதே நமது கருத்து.
தேசியப் பாதுகாப்புச் சவாலின் ஆழத்தை உணர்ந்து, தலைமை மீது நம்பிக்கை வைப்போம். அரசியல் புலம்பல்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, 56 இன்ச் தலைவரின் துணிச்சலைப் பார்த்துப் பெருமை கொள்வோம்!


