தமிழ் குரல் / AI Voice
குடி, அடி, வெட்டு என்றெல்லாம் மிரட்டலுடன் அவதூறு பேச்சு பேசியதாகக் கைது செய்யப்பட்ட காமெடி நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் படுகிறார் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாயக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சிரிப்பு நடிகர் கருணாஸ் நடத்தும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் சென்னை தி.நகர் டெபுடி கமிஷனர் அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் என்ற கூட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார். தொடர்ந்து ப்ந்நெசிய தனது ஆட்களின் வீரப்பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ”நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்” என்று பேசினார்.
பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.
அத்துடன் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்கு வோம் என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றி இருப்பேன் என்றெல்லாம் பேசினார்.
இதையடுத்து அவரை கைது செய்ய கண்டனக்குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தி னரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் முதல்வர், காவல்துறையை அவதூறாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்யும் போது, எம்.எல்.ஏ.வைக் கைது செய்ய வேண்டுமென்றால் சபாநாயகர் அனுமதி வேண்டும் என்று வாதிட்டுள்ளார். ஆனால் குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒருவர் எம்.எல்.ஏ. வாகவே இருந்தாலும் அனுமதி தேவையில்லை, தகவல் தெரிவிப்பே போதும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதன் பின் நுங்கம் பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரிக்கப் பட்டார். பிறகு எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நிர்வாகி செல்வ நாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.
இதனிடையே அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றும் அதன் அடிப்படையில் கருணாஸ் மீது குண்டர் சட்டம் பாயக் கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.



