தமிழ் குரல் / AI Voice
ஹாலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாக்களில் ஒரு கெத்தான போலீஸ் அதிகாரியின் அதிரடியை மட்டும் காட்ட என்னென்ன ஃபார்முலா அல்லது ஸ்கிரின் பிளே தேவையோ அத்தனையையும் கொஞ்சம் கூட குறை வைக்காமல் சாமி 2 என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் டைரக்டர் ஹரி, அதிலும் யான் விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்து வெற்றி பெற்ற ‘சாமி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே இந்த சாமி- ஸ்கொயர் தயாராகி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த படத்தின் கதை என்னவென்று கேட்டால் சூப்பர் ஹிட் அடித்த முதல் பாகத்தில் திருநெல் வேலி துணை கமிஷனரான ஆறுச்சாமி (விக்ரம்) வில்லன் பெருமாள் பிச்சையை (கோட்டா சீனி வாசராவ்) சுட்டுக் கொன்று செங்கல் சூளையில் வைத்து எரிப்பதுடன் படம் நிறைவடையும். அதை நினைவூட்டி அங்கிருந்தே 2ம் சாமி படத்தின் கதையும் தொடங்குகிறது.
கோட்டா சீனிவாச ராவின் 2-வது மனைவி சுதா சந்திரன் இலங்கையில் வசிக்கிறார். அவரது 3 மகன் களான பாபி சிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் அப்பாவிற்கு நடந்தது என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து திருநெல்வேலிக்கு வருகின்றனர். அங்கு வந்த பின்னர் தனது தந்தை விக்ரமால் சுட்டுக்கொல்லப்பட்டதை தெரிந்து கொள்ளும் பாபி சிம்ஹா, அவர் ஓடி ஒளியவில்லை என்றும், வீர மரணம் அடைந்து விட்டார் என்றும் அறிவித்து விட்டு தந்தைக்கு டவுன் நடுவில் சிலை அமைத்து தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபடுகிறார்.
இதை கேள்விப்படும் விக்ரம் வேறு ஊரிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றலாகி தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் காரில் வருகிறார். அப்போது பாபி சிம்ஹா மற்றும் அவரது சகோதரர்கள் வழிமறித்து விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குத்தி கொலை செய்கின்றனர். இதில் ஐஸ்வர்யா உடனே இறந்து விட அவரது வயிற்றில் உள்ள குழந்தை உயிருக்கு போராடுகிறது. அதை பார்த்த விக்ரம் கத்தியால் கிழித்து குழந்தையை காப்பாற்றுகிறார்.
அந்த குழந்தை விக்ரமின் மாமனாரான டெல்லி கணேசிடம் டெல்லியில் வளர்கிறது.28 வருடங்கள் கழித்து சிவில் சர்வீஸ் பயிற்சி முடித்து ஐபிஎஸ் அதிகாரியாக ஆறுச்சாமி மகன் ராம்சாமி வரு கிறார். இதனிடையே மத்திய அமைச்சரான பிரபுவிடம் பயிற்சி அதிகாரியாக விக்ரம் (ராம்சாமி) பணிபுரிந்து வருகிறார். அப்போது பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷ் உடன் காதல் ஏற்படுகிறது.
இதற்கிடையே தாத்தா டெல்லி கணேஷ் மூலம் தனது தந்தைக்கு நேர்ந்த கொடுமையை தெரிந்து கொண்டு திருநெல்வேலிக்கு உதவிக் கமிஷனராக பணியில் சேர்கிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை கடத்தி வைத்துக் கொண்டு பிரபுவை பணம் கேட்டு பாபி சிம்ஹா மிரட்டுகிறார்.
திருநெல்வேலிக்கு வந்த பிறகு பாபி சிம்ஹாவின் கொட்டத்தை எப்படி அடக்குகிறார். அவரின் சகோதரர்கள் ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜயை என்ன செய்கிறார் பாபியிடம் இருந்து கீர்த்தி சுரேஷை எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
சுறு சுறுப்புக்கு பேர் போன ஹரி படம் என்றால் திரைக்கதையின் வேகத்திற்கும், கேமராவின் ஓட்டத்துக்கும் குறையே இருக்காது. அந்த வகையில் சாமி-2 படமும் விறுவிறுப்பாக உள்ளது. தனது வழக்கமான ஸ்டைலில் முந்தையப் படத்தின் தொடர்ச்சியாக பக்காவாக திரைக்கதையை அமைத்து அதற்கேற்றார் போல் கதைக் களங்களை தேர்வு செய்து முழு கமர்ஷியல் மாஸ் படத்தை ஹரி கொடுத்துள்ளார்.
கதைக்காக தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் விக்ரமிற்கு ரிலாக்சாக இந்த படம் அமைந்து உள்ளது. அதிலும் தற்போது நிஜ வாழ்க்கையில் தாத்தா ஆகப் போகிறவர் 15 வருஷத்துக்கு முந்தைய கேரக்டரிலும் பக்காவாக ஃபிட் ஆகி தனது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் பஞ்ச் வசனங்களுடன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். .
முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய பெருமாள் பிச்சைக்கு கொஞ்சமும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பாபி சிம்ஹா தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ராவணா பிச்சை என்ற பெயரில்ல் வருபவர் பட்டையை கிளப்பியிருக்கிறார். என்ன ஒரு எனர்ஜியான நடிப்பு…, வில்லன் வேடத்திற்காகவே பிறந்த நடிகரைப் போல மனுஷன் மிரட்டுகிறார்.
திரிஷாவுக்கு பதிலாக வரும் ஐஸ்வர்யா கொஞ்ச சீன்கள் என்றாலும், தனது கேரக்டரை நீட்டாக செய்துள்ளார். ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். காமெடியன் சூரி கடுப்பேற்றும் கேரக்டராக கதை ஓட்டத்தையே சுணக்கும் விதத்தில் வந்து வந்து போகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருந்தாலும். பின்னணி இசையில் ஆர்வம் காட்டாததால் டல் அடிக்கிறது. பிரியன் & வெங்கடேஷின் ஒளிப்பதிவில் கேமரா கதையுடன் ஓட்டமெடுக்கிறது. மொத்தத்தில் இந்த சாமி(யும்)விக்ரம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
மார் 5 / 3.5

