தமிழ் குரல் / AI Voice
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. அதையடுத்து நடந்த அரசியல் சடு குடு ஆட்டத்திலிருந்து சசிகலா & தினகரன் குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு விரட்டப்பட்டது. அத்துடன் முதல்வர் பழனி சாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வசம் அ.தி.மு.க சென்றதுடன் அதன் ஒருங்கிணைப்பாளர் களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் அ.தி.மு.க-வின் செய்தித்தாளாக இருந்துவந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந் நாளிதழின் வெளியீட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் தான் இருந்தது. அதே போல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது . சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இதனை அவர்களது உறவினர்களை கவனித்து வருகின்றனர்.
அதன் பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களான நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா டிவி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவையெல்லாம் தனியார் சொத்தாக்கும் என்று தெரிவித்த தினகரன், முடிந்தால் கைப்பற்றிப் பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த முயற்சி தோல்வி யடைந்த நிலையில், அதிமுகவுக்கென தனியாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதா பிறந்த தினத்தன்று நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் தொடங்கப்பட்டது.
இதையடுத்து விரைவில் செய்திச் சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்கு `நியூஸ் ஜெ’ எனப் பெயரிட்டுள்ளனர். சேனல் தொடங்குவதற்கான வேலைகள் மும்முராக நடந்து வருகிறது. இந்த சேனல் தொடங்குவதற்கு முன்பாக `நியூஸ் ஜெ’ லோகோ, மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் வெளியிடப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இதனைத் தொடங்கி வைக்கின்றனர்.

