ஏ.டி.எம்.,களில் கொள்ளையடிக்க சிறப்பு பயிற்சி!- ரஷ்ய அதிர்ச்சி!!
தற்போது சகலரும் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு தொடர்பாக இன்னும் பலருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. சிலர் ஏ.டி.எம். கார்டை தொலைத்துவிட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் பல மணிநேரம் இருப்பார்கள். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கும். ‘பின் நம்பரை’ அறிவதற்கு எல்லாம் இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம். கார்டு தொலைந்து விட்டால் அதை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை ‘பிளாக்’ செய்வது மிகவும் முக்கியம்.
சில சமயங்களில் ஏ.டி.எம். மையத்தில் நம் பின்னால் நிற்கும் ஆட்களோ, காவலாளி போன்று தோன்றுபவர்களோ இயல்பாக எட்டிப் பார்த்து நம் பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் உங்கள் செல்போன் எண்ணுக்குச் சிலர் அழைத்து, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக் காக’ விசாரிப்பதற்காக கூறி கேட்பார்கள். யோசிக்காமல் நாம் அந்தத் தகவல்களை அளித்துவிட்டால், உடனடியாக டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபடக்கூடும்.
முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத மாதிரி அமைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண் களைத் தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிடும் என ஏ.டி.எம். கார்டின் பின்புறத்திலேயே அதை எழுதிவைக்க வேண்டாம்.
இத்தனைக்கும் நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதில் உள்ள ‘சிப்’பில்தான் விவரங்கள் பதிந்திருக்கும். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் செருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்டு தயாரித்து மோசடி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. இதனிடையே ரஷ்யாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடிக்க திருடர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது ரஷ்யாவில் பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம்.,கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கடுமையான குளிர் சீதோஷணம் நிலவும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஏ.டி.எம்.,களில் அடிக்கடி கொள்ளை நடக்கின்றன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் அனுபவமிக்கவர்கள் திருடர்களுக்கு ஏ.டி.எம்.,களில் கொள்ளையடிக்க சிறப்பு பயிற்சியும் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயிற்சி கட்டணமாக கொள்ளையடிப்பதில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட வேண்டுமாம். இந்த தகவல் தற்போது வெ ளியாகியுள்ளதால், ஏ.டி.எம்., கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




