தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு!

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு!

சென்னையில் காவிரி போராட்டத்தை திசை திருப்பவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்பதால் அதை அனுமதிக்க கூடாது என்று இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறினர். மேலும் தமிழர் பண்பாட்டு பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியிருப்பதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இது தொடர்பாக மூவரும் சென்னை பிரஸ்கிளப்பில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பாரதிராஜா, “தமிழ் நிலத்திற்கு இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியவில்லை. நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் இன்று ஒரு தமிழனாக நாங்கள் குரல் கொடுக்கிறோம். காவிரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதை திசைதிருப்பவே சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. எனவே இந்த போட்டியை சென்னையில் நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும். நாங்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரானவர்கள் அல்ல. இப்போதைய சூழ் நிலையில் இந்த போட்டி நடைபெற கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. இப்போதைய ஆட்சி தமிழ்நாட்டின் உரிமைகளை எங்கோ வைத்திருக்கிறது. அதை வெளியில் கொண்டு வர வேண்டும்” என்று அவர் கூறினார். உங்கள் கோரிக்கைளுக்காக போராட்டம் நடத்துவீர்களா என்று கேட்டப்போது நிச்சயமாக நடத்துவோம். அதற்கான வழிமுறைகளை இப்போது கூற மாட்டோம் என்றார் பாரதிராஜா.

நடிகர் சத்யராஜ் கூறுகையில், எங்கள் பேரவை அரசியல் சார்பற்றது. எனக்கு எந்த அரசியல் கனவும் இல்லை. தமிழனாக தமிழர் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார்.

ஆர்.கே.செல்வமணி கூறுகையில், இந்தியாவில் குப்பை கிடங்காக தமிழ்நாட்டை மாற்ற அனுமதிக்க மாட்டோம். அனைத்து சமூக போராளிகளையும் சந்தித்து போராட்டத்தை நடத்த தீவிரப்படுத்துவோம். கிரிக்கெட் மைதானம் காலியாக இருக்கும் போதுதான் தமிழர்களின் உணர்வு புரியும் என்றார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இயக்குநர் பாரதிராஜாவிடம், ‘நீங்கள் ஏன் நேற்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு அனைத்துக்கும் மையமாக சென்னை இருந்தது. ஆனால், இன்று எல்லாமே தனித்தனியாக அவர்களுக்கென அமைப்பு வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மாற்றப்படவில்லை. எனவே, இந்தப் பெயரை மாற்றும்வரை அதுசார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றுள்ளேன்” எனப் பதிலளித்துள்ளார் பாரதிராஜா.

Related Posts