நிமிர் – விமர்சனம் = பல்லிளித்துவிட்ட படம்!

நிமிர் – விமர்சனம் = பல்லிளித்துவிட்ட படம்!

நிமிர்

இயக்கம் – பிரியதர்ஷன்.

உதயநிதி, சமுத்திரகனி, நமிதா புரமோத் போன்றோர் நடிப்பு.

மலையாளத்தில் எளிமையான கதையாய் எடுக்கப்பட்டு வாழ்வியல் பேசி வெற்றிபெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் திரைப்படம்தான், தமிழில் தோரணங்களுடன் மேக்கப் போட்டு நிமிராக வந்திருக்கிறது.

இந்தக் கதையை தற்போது தமிழில் பிரமாண்டமாக எடுப்பதா இல்லை எளிமையாய் எடுப்பதா என்ற குழப்பத்தில் இருந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சில காட்சிகள் பிரமாண்டம், சில காட்சிகள் படு எளிமை.

இந்தக்கதை தமிழ் சினிமாவில் இரண்டு காட்சிகளில் அடித்து துவைத்துப் போடப்பட்ட கதை.

மலையாளத்தில் அதன் வாழ்வியல் நிலத்தன்மையும் படத்துடன் ஒட்டியிருக்கும். தமிழில் இதைக் கொண்டு வர அரும்பாடுபட்டிருக்கிறார்கள் ஆனால் பல்லிளித்துவிட்டது படம்.

சாதாரணன் காதல், தோல்வி, அவமானம் இதைக் கடந்து மீண்டும் நிமிரும் வாழ்க்கைதான் நிமிர். ஆனாலும்

படத்தின் எளிமை அதன் கதாப்பாத்திர தேர்வுகளில் இருக்கிறது. இதில் உதயநிதி, மகேந்திரன், சமுத்திரகனி என எல்லோரும் பெரிய காஸ்டிங். எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் அவர்களில் பிரமாண்டம் கதையின் எளிமையை கெடுக்கிறது.

உதயநிதி தான் நடித்ததில் சொல்லிக் கொள்ளும்படியான படமாக வந்திருக்கிறது. காதல் தோல்வியில் வருந்தி நிற்பது, அடிப்பட்ட அவமானத்தில் சுருங்கிப்போவது என மென்மை உணர்வுகளை அழகாய் கொண்டுவந்திருக்கிறார்.

புதுமுகம் நமிதா புரமோத் குறுகுறு கூடிய குறும்பு அழகு. நடிப்பிலும், நடனத்திலும் அடத்துகிறார். கடைசி காட்சியில் உதயநிதியிடம் கெஞ்சும் காட்சியில் கொள்ளை அழகு. மகேந்திரன் பாந்தமாய் வந்து போகிறார். சமுத்திரகனியும், எம்.எஸ்.பாஸ்கரும் தங்கள் பகுதியை சிறப்பாய் செய்திருக்கிறார்கள். பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. இசையும் ஒளிப்பதிவும் படத்தை பிரமாண்டபடுத்தியிருக்கிறது.

படத்தின் உயிர்நாடியான இறுதிச்சண்டைக்காட்சி மொக்கையாய் போய்விட்டது. பிரியதர்ஷன் என்பதால் மட்டுமே ஒரு ரீமேக் இந்த அளவு கெடாமல் வந்து நிற்கிறது.

மொத்தத்தில் மேக்கப் இல்லாமல் அழகாய் இருக்கும் பூவிற்கு மேக்கப் போட்டு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நிமிர் முழுதாய் நிமிரவில்லை.

மார்க் 5 / 2.25

கதிரவன்

Related Posts