32°C
விளம்பரம்
Advertisement

தோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம்! – கார்த்தி பேச்சு!

admin சேலம் Published: November 27, 2017 8 நிமிட வாசிப்பு Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கி இருந்தார். கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இப்படத்தில் கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும், காவல் துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி, புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தீரன் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர், ‘அற்புதமான போலீஸ் படம். நகம் கடித்து, சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். சிறந்த முயற்சி’ என்று நடிகர் கார்த்தி, இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந் நிலையில் நம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடினர். இந்த வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில்  அண்மையில்  நடைபெற்றது. அதில் கார்த்தி, இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர், ஒளிப்பதிவாளர் சத்யன், எடிட்டர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

வெற்றி கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் S.R. பிரபு பேசிய போது, “இயக்குநர் வினோத் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இந்த ஒரு சப்ஜெட் மட்டும் தான் இருந்தது. அதிலிருந்து தான் மேம்படுத்தினோம். முதலில் இந்த கதை தான் ரொம்ப நம்பிக்கையான விஷியமா எங்களிடம் இருந்தது. இரண்டாவதாக வினோத் மீது நம்பிக்கை இருந்தது. அவர் தான் எடுத்து கொண்ட விஷியத்தில் தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதில் மிக தெளிவாக இருந்தார். தன் இரண்டாவது படத்திலே பெரிய படம் என்ற பதற்றம் இல்லாமல் இருந்தார். படம் எப்படி வரும் என்று எங்களிடம் முன்பு கூறினார் ஆனால் அதை விட படம் நன்றாக வந்து உள்ளது. சத்யன் அவருடன் இது எங்களுக்கு இரண்டாவது படம். முதல் படம் மாயாவில் எங்களுக்கு முதுகு எலும்பு போல் இருந்தார். அவரும் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தோம் அவரும் தன் அதிகமாக உழைப்பை கொடுத்து உள்ளார். குளிரிலும், வெய்லிலும் படத்தை நன்றாக படக் குழுவினர் நல்ல முறையில் முடித்து கொடுத்தனர். பட பிடிப்பு தளத்தில் எங்களுடன் இருந்து பொருளாதார நிலையையும், படத்தின் தரத்தை பற்றியும் தானா முன் வந்து கதிர் சார் உதவி பன்னார். எல்லாரும் பாராட்டும் போதுதான் சிவ நந்தீஸ்வரன் இந்த படத்தில் வேலை பார்த்தார் என்பது தனியா தெரிகிறது. அவர் எங்களில் ஒருத்தர் தான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது. படத்தை முழுமை படுத்தியது ஜிப்ரானின் இசை தேவையான இடங்களில் அருமையாக இசை அமைத்து உள்ளார்.

இந்த படத்தில் கைரேகை நிபுணராக தனஞ்ஜெயம் அவர்கள் நடித்து உள்ளார். அவர் உண்மைலேயே கைரேகை நிபுணர். உண்மைய கதையை மையமாக கொண்டதால் படத்தின் கதைக்காக வினோத் பல பேரிடம் கலந்து பேசினார் அவற்றில் சில முக்கியமானவற்றை எடுத்து கொண்டார். அதில் அவரே நடித்தால் இன்னும் நம்பக தன்மை இருக்கும் என்று அவரிடம் கேட்டார் அவரும் ஒத்துக்கொண்டு படத்தில் நடித்தார். படம் முடிந்து வரும் அனைவருமே காவல் துறையின் மீது நல்ல எண்ணம் ஏற்படும் விதத்தில் படம் அமைந்து உள்ளது.” என்றார்.

இப்படத்தின் வெற்றி குறித்து கார்த்தி, “ஒரு படம் பார்த்து விட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதாது மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இந்த படம் என்னை தேடி வந்த படம். இந்த வழக்குகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் தன் கஷ்டங்கள் வெளியில் தெரியாமல் போய்விட்டது என்று நினைத்து இருப்பார்கள் அந்த வழக்கு பற்றிய செய்தி இயக்குநர் வினோத் அவர்களுக்கு பத்திரிக்கை செய்தியாக வந்தது. எனக்கும் அது தேடி தேடி வந்தது. நல்ல படமாக அமைந்ததில் சந்தோசம். ராஜஸ்தானில் படபிடிப்பு நடத்தும் போது உணவு பிரச்சனை ஏற்படும். அப்போது தயாரிப்பாளர் மொத்த படக்குழுவையும் விமானம் மூலம் அழைத்து சென்று தமிழ் நாட்டு உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். இயக்குநர் வினோத் படபிடிப்பை பற்றி அதிக திட்டங்களை வைத்து இருந்தார் ஆனால் பல பிரச்சனைகள் இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவர் இருந்தார்கள் அவர்களிடம் அனுமதி பெறுவதே பெரும் பாடாக இருந்தது. இதனால் இயக்குநர் நினைத்த விஷயம் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் வருத்தப்பட்டார். ஆனால் படத்தொகுப்புக்கு பின் அவ்வளவு பிரச்னையை தாண்டி எடுத்தோம் படம் நல்லா வந்துருக்கு சார் என்றார். ஒரு படம் எடுப்பதே அப்படி தான் இருக்கிறது நாம் பெரிய கனவுகளோடு செல்கிறோம் அதை எடுத்து முடிப்பது இறைவன் செயலாக இருக்கிறது.

சிவ நந்தீஸ்வரன் நன்றாக உழைத்து உள்ளார். முதல் படத்தில் அவரை பற்றிய கருத்து நல்ல முறையில் வந்தது இருந்தது. இயக்குநர் வினோத் இந்த காட்சியில் இந்த உணர்வு வரவேண்டும் என முதலிலே எழுதி வைத்திருப்பார். ஜிப்ரான் அருமையான கமெர்சியலாக அனைவருக்கும் பிடித்தது போல் இசை அமைத்து உள்ளார். தனஞ்ஜெயம் சார் நன்றாக நடித்து இருந்தார். கைரேகை எடுப்பதை பற்றி அவர் கூறுவார். அதை போல் காட்சிகள் அமைந்தது. காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக அமைய இது போன்ற காட்சிகள் உறுதுணையாக இருந்தது. அவர் கூறும் போது உண்மைலேயே தன் பணியின் மீது பற்று இருந்ததால் மட்டுமே அவர்கள் அவ்வாறு செயல் பட முடியும் என்று தோன்றியது. இந்த படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார்கள். முக்கியமா அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயர் அதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்சியாக இருந்தது அனைவரும் என்னை பாரட்டினார்கள் என்றார். கதையை திரையில் கொண்டு வருவது என்பது மிக முக்கியமான ஒன்று பொருளாதார ரீதியாகவும் நடு நிலையாக இருந்து கதிர் சார் பார்த்துகிட்டார். இனி அனைத்து காவல்துறை சம்பந்தபட்ட படங்களில் இனி அவர் கண்டிப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது. இயக்குநர் வினோத்தின் முதல் படம் அருமையான படம் ஆனால் இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும். தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும். எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இந்த படத்தில் காதல் காட்சி பற்றி அனைவரும் கூறினார்கள் சில பேர் காதல் காட்சி நல்லா இல்லை என்றும் சில பேர் காதல் காட்சி அருமையாக வந்து உள்ளது என்றும் கூறினார்கள். ஒரு படத்தில் அனைத்து விதமான விமர்சனக்கள் வரும் ஆனால் இந்த படத்தில் நல்ல விதமான விமர்சனகள் மட்டுமே வந்தது உள்ளது.

மேலும் அவர் பேசிய போது “என்னை பொறுத்தவரை இந்த படத்தின் வெற்றி இதுவரை என்னுடைய படங்கள் அனைத்தையும் பருத்திவீரன் படத்துடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டே இருந்தார்கள். அது இந்த படத்தின் மூலம் மாறியுள்ளது. இந்த படத்தை விடவும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை பார்த்த படம் காற்று வெளியிடை. ஆனால் அதற்கான ரிசல்ட் உடனே கிடைக்கவில்லை. இப்போது கிடைத்தது மகிழ்ச்சி. தோல்விகளையும் அவமானங்களையும் தாண்டி வரும்போது தான் நம்முடைய மைன்ட் வலுவடைகிறது. அதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.”

“இந்த படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக காதல் காட்சிகள் குறித்து. சில பேர் உங்களுக்கு ரெமான்ஸ் வரவே இல்லை, இனிமேல் காதல் காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று கூறியிருந்தார்கள். இன்னும் சிலபேர் ஓவரா ரொமான்ஸ் பண்றீங்க என்று கூறி இருந்தார்கள். ஒரு படம் என்று எடுத்துக்கொள்ளும்போது எல்லாவிதமான விமர்சனங்களும் வரும். இங்கு பெருவாரியான விமர்சனங்கள் பாசிடிவாக வந்திருக்கு. அதற்கு எல்லாருக்கும் என்னுடைய நன்றி.” என்று கூறினார்.

மேலும் திருட்டு விசிடி குறித்தும் பேசிய அவர், “இந்த படத்தை திருட்டு வீடியோவில் பார்ப்பவர்கள் அதை குற்றம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து தீரன் படத்தின் பெயரை சொல்லி யாராவது ஒரு பிச்சைக்காரருக்கு 100 ரூபாய் தானமாக வழங்குங்கள். இங்கு திருட்டு விசிடியை ஒழிப்பது முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எனவே திருட்டு வீடியோ பார்பவர்கள் அதை ஒரு குற்றமாக கருதி இதையாவது செய்யுங்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் குறித்து கார்த்தி, “நான் இதுவரை யாரிடமும் கடம் வாங்கியதில்லை. அசோக் அவர்களை எனக்கு பருத்தி வீரன் படத்திலிருந்தே தெரியும். அவர் எவ்வளவு நிதானமான மனிதர் என்பது எனக்கு தெரியும். அவர் எமோஷனல் ஆனா ஆள் கிடையாது. வாழ்கையை சரியாக புரிந்துகொண்ட ஒருவர். பரபரப்பான சூழ்நிலையை சரியாக கையாளக்கூடிவர். அவர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதை நாம் எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்றுதான் நான் யோசிக்கிறேன். நிதானமாக யோசிக்கக்கூடிய அவர் இந்த முடிவை எடுக்க காரணம் என்ன என்பது கண்டறியப்படவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்