உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்ட இந்திய நகரங்கள் பட்டியல்!
நம்ம தமிழக உள்பட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை உங்களில் சிலர் உணர்ந்திருக்கலாம். லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மைய நிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேசியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாட்டில் உள்ள 29 நகரங்கள் நிலநடுக்கங்கள் தாக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் இமாலய அடுக்கில் டெல்லி மற்றும் 9 மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்டதாக அறியப்படும் இமாலய அடுக்கில் உள்ள நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி, பாட்னா (பீகார்), ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, கௌகாத்தி (அசாம்), கேங்டாக் (சிக்கிம்), ஷிம்லா (ஹிமாச்சலப் பிரதேசம்), டேராடூன் (உத்தராகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டிகர் (பஞ்சாப்) ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை நிலநடுக்க அபாயம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து இந்திய தரநிர்ணய ஆணையம் ஜோன் – 2 முதல் ஜோன் – 5 வரை 4 பகுதிகளாக பிரிக்கிறது. நிலத்துக்கு அடியில் இருக்கும் தட்டுகளின் நகர்வு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவைகளும் பகுதிகளைப் பிரிக்கும் போது கணக்கில் கொள்ளப்படும். இதில் ஜோன் – 2 என்பது குறைந்த நிலநடுக்க அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஜோன் – 5 என்பது உச்சகட்ட நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது. ஜோன் 4 மற்றும் ஜோன் 5 ஆகியவை கடுமையான அல்லது மிகவும் கடுமையான நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்படுகிறது.
மொத்த வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிகள், பீகாரின் வடக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள் போன்றவை ஜோன் – 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல, டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் ஒருசில பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் வடக்கு பகுதி, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தின் சிறிய பகுதி போன்றவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனவாம்.
எக்ஸ்ட்ரா இன்ஃப்ர்மேஷன்:
இப்படி நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்க ளின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர். இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.
பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.


