‘நிபுணன்’ படத்தை தயாரித்த அனுபவம்! – அருண் வைத்தியநாதன் பேட்டி!

‘நிபுணன்’ படத்தை தயாரித்த அனுபவம்! – அருண் வைத்தியநாதன் பேட்டி!

‘ஆக்‌ஷன் கிங் என்ற அடைமொழிக்கு அடையாளமாகி விட்ட அர்ஜுன் கன்னட மொழி படங்களில் இருந்து தமிழுக்கு ராம நாராயணனின் ‘நன்றி’ படம் மூலம்தான் அறிமுகமானார். ‘ஜென்டில்மேன்’ ,’ஜெய்ஹிந்த்’, ‘முதல்வன்’ என்று தமிழில்  ஹிட் படங்களில் நடித்து  பிரபலமான் நடிகர். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை இன்றளவும்  பின்பற்றி வருபவர். அவர் நடித்து நட்சத்திரப் பட்டாளங்களுடன் வரும் ஜூலை 28ம் தேதி வெளி வர இருக்கும் ‘நிபுணன்’ படம்  அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்’ என்பது படத்தின் கதா நாயகனான அர்ஜுனைத் தான் குறிப்பிடுகிறதாம். கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உண்மைகளை கண்டறியும் கதாநாயகனின் கதை `நிபுணன்’. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் என நட்சத்திர பட்டாளாமே நடித்துள்ளது.

இந்த நிபுணன் படத்தின்  டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் ‘நிபுணன்’ திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகி யுள்ளதாம் . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகி உள்ள இந்த   ‘நிபுணன்” திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.இப்படத்தை ‘Passion studios’ சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பாளர் நவீனின் இசையில் எல்லா பாடல்களுமே இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவிலும், சதிஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி , அருண்ராஜ் காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் எழுதி யுள்ளனர். சோதனை காலத்தை கடந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை , மீண்டும் சினிமா ரசிக்கும் ரசிகர் கூட்டங்களை திரையரங்கிற்கு வர வைத்து , பழைய பாதைக்கு இப்படம் கொண்டு போகும் என்று சினிமா வட்டாரங்க ளால் நம்பப்படுகிறது. படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “இப்படத்தில் துப்பறியும் நிபுணருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அர்ஜுன் சாருடைய அணியில் இருப்பவர்கள் நண்பர்கள். இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் வேலை ஒவ்வொருத்தருடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. க்ரைம் த்ரில்லராக மட்டுமே படம் இருக்காது. நிபுணன் என்பதால் அவருடைய வாழ்க்கையில் சறுக்கல்களே இருக்காது என்று சொல்ல முடியாது. குடும்பப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் மீறி எப்படி ஜெயிக்கிறார் என்பதைக் காட்டியுள்ளேன்” என்றவர் தொடர்ந்து, “இந்த கதைக்காக நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பெங்களூ ருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், ”இப்படத்தை நானே தயாரித்து இருப்பது பற்றி பலரும் கவலையுடன் விசாரித்தார்கள். உண்மைதான்.. திரைப்படத் துறையிலே மிகவும் சபிக்கப்பட்டவர்கள் தயாரிப்பாளர்கள்தான். இங்குத் தயாரிப்பாளர்களுக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. ஒரு குடும்பத்தில் அப்பா – அம்மா என எடுத்துக்கொண்டால் அம்மா – இயக்குநர், அப்பா – தயாரிப்பாளர். அப்பா எப்போதுமே பணத்தைச் செலவழிப்பதில் கட்டுப்பாட்டுடன் அறிவுரை சொல்வார். ஆனால், அம்மா அன்புடன் இருப்பார். இந்த இருவருமே கலந்தால் மட்டுமே மகன் என்ற நல்லதொரு படம் உருவாகும். இதை புரிந்திருந்த நான் என்னுடைய தயாரிப்பாளர் களில் யாராவது ஒருவர் ஆலோசனை கூறினால், நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனே ஏற்றுக்கொள்வேன். நான் இதுவரை தயாரித்த படங்கள் அனைத்திலுமே நல்ல தயாரிப்பாளராக இருந்து, இயக்குநரைப் பாதுகாத்தேன். அதுதான் தயாரிப்பாளராக என்னுடைய வேலை. ஆனாலும் வணிகரீதியாக எல்லாத் தயாரிப்பாளர்களுமே போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக இந்த நிபுணன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். முதலில் தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளிக்கவே, மறுதணிக்கைக்கு சென்றது படக்குழு. இதனால் பட வெளியீடும் பாதிக்கப்பட்டது.தற்போது மறுதணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்தைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக ‘நிபுணன்’ படக்குழு அறிவித்துள்ளது. என்றாலும் இப்படத்தின் கதை ஒரு எம்.பியின் மரணத்தை மையமாக கொண்டே உருவாக்கி இருப்பதால் ஹாட் டாபிக்காகும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.!

Related Posts