நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்…:
பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் சர்ஜரி’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.

சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4ந் தேதி அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிட்டிபாபு மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார்.இவருக்கு 49 வயதாகிறது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


