ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: சாம்பியன் ஆனது இந்திய அணி!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் டிசம்பர் 8-ம் தேதி முதல் இன்று வரை ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. 2-1என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

இந்திய அணி தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது. 8-வது நிமிடத்தில் குர்ஜத் சிங் அருமையாக பீல்டு கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 22-வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் ஒரு பீல்டு கோல் அடித்தது. இந்த கோலை சிம்ரன்ஜித் சிங் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.
46-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பெல்ஜியம் வீணடித்தது. 53-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாகியா முறியடித்தார்.
எனினும் போராடிய அந்த அணி 70-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பேஃப் ரைஸ், பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு அணிகள் தரப்பில் மேலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
2001–ம் ஆண்டில் பட்டம் வென்ற இந்திய அணி 3–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. 1997–ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு 2–வது இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


