வாரணாசி ; நெரிசலில் பலியான 24 பேர்களுக்கு அஞ்சலி -ட்விட்டரில் மோடி
உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை பேரணி நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பேரணியாகச் சென்றனர். ராஜ்காட் மேம்பாலத்தின் மீது நெருக்கடியான இடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு முந்த முயன்றதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ வாரணாசியில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி ஆழ்ந்த கவலை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நெரிசலில் சிக்கியவர்களுக்கு உரிய உதவி அளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வரையும் இழப்பீடு வழங்குவதாக, உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.


