இந்திய ராணுவம் ; பாக் தீவிரவாதிகள் மீது அதிரடியாக பதிலடி!

இந்திய ராணுவம் ; பாக் தீவிரவாதிகள் மீது அதிரடியாக பதிலடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நுழைந்து 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு குரல்கள் எழத் தொடங்கின. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டைப் புறக்கணித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தது.

ind army sep 30

அது மட்டுமின்றி இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 வரை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படை விமானங்களில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பீமர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள இந்திய ராணுவம், நமது வீரர்கள் யாரும் இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 35 முதல் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அதிரடித் தாக்குதல் குறித்து புது டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங், “இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகளை அனுமதிக்கக் ககூடாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் வலியுறுத்தலை பாகிஸ்தான் புறக்கணித்து வருகிறது.

இந்திய எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதன் ஆரம்பமே இந்த அதிரடி தாக்குதல் என்றும், நேற்று இரவு தொடங்கிய தாக்குதல், இன்று அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றதாகவும் கூறினார்.

இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உதவியவர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம். பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்று ஜெனரல் ரன்பீர் சிங் கூறினார்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து 500 மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.