விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி !

விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி !

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் வாங்கி, திருப்பித் தராமல் கடந்த மார்ச் 2-ம் தேதி லண்டனுக்குப் பறந்தார் விஜய் மல்லையா. மேலும் தன் மீதுள்ள வழக்குகளைச் சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் மோசடி வழக்குகள் பலவற்றைத் தொடர்ந்துள்ளனர். இவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளை பிறப்பித்துள்ளன.

vija june 15

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் சமீபத்தில் முடக்கியுள்ளனர், இதற்கு மல்லையா எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமலாக்கப் பிரிவினர் பாரபட்சமாக செயல்படுவதாகச் சாடியிருந்தார்.இந்நிலையில் அமலாக்கப் பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமலாக்கத்துறையினரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிபதி பி.ஆர்.பாவ்கே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.ஜூன் 10-ம் தேதி அமலாக்க இயக்ககம் நிதிமோசடித் தடுப்பு நீதிமன்றத்தை அணுகி மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்/று அறிவிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தனர். குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 82-ன் கீழ் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று உத்தரவிட வேண்டும் என்று அமலாக்க இயக்ககம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இது தொடர்பாக மல்லையா வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில்,“பொதுவாக சிவில் வழக்குகள் குறிப்பாக கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றவியல் நடைமுறை சார்ந்திருக்கும். இதற்கு எந்த விதமான அடிப்படை முகாந்திரமும் இருக்காது.ஊடகங்களில் வெளியான தகவல் மற்றும் அமலாக்கத்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமலாக்கத்துறை எனது பல்வேறு சொத்துகள் மற்றும் யுனைடெட் பிரூவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் – அதாவது பொது நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்காக அமலாக்கத்துறை இங்கு எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.

மேலும் அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தை நாடி அங்கு என்னை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தனக்குப் புரியவில்லை” என்று மல்லையா கூறியிருந்ததும் நினைவுகூறத்தக்கது.