திருட்டு விசிடி விவகாரத்தில் நடத்தை மீறும் நடிகர் சங்கம்! – புலம்பும் ரியல் போலீஸ் + தியேட்டர் ஓனர்ஸ்!

திருட்டு விசிடி விவகாரத்தில் நடத்தை மீறும் நடிகர் சங்கம்! – புலம்பும் ரியல் போலீஸ் + தியேட்டர் ஓனர்ஸ்!

நடிகர் சங்க செயலாளரான விஷால் ஓரிரு வாரங்களுக்கு முன்பு, “நான் நடிச்ச ‘மருது’ படத்துக்கு கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். அப்ப நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன். அப்படி திருட்டு விசிடிகளை நான் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன். அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத் தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் கள்தான் இந்த மாதிரியான திருட்டைத் தடுக்க முன் வர வேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்” என்று கோபமாக பேசி விட்டு சொன்னது போலவே ஒட்டு மொத்த நடிகர் சங்க ஜூனியர் ஆர்டிஸ்டிகள் கொண்ட ஒரு ஸ்பெஷல் டீமை உருவாக்கி தமிழகமெங்கும் இஷ்டத்துக்குப் புகுந்து சோதனை என்ற பெயரில் அடாவடி செய்வதாக செய்திகள் வந்துள்ளது.

cine may 24 a

போன வாரம் இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் லட்டர் பேடில் அதன் செயலாளரான விஷால், தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்!இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை. இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது.அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிபேருந்தை ஓட்டுவதும், பயண சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்டவிரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே! அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பலவித நிலைகளில் போராடிய படி வருகிறோம்!அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது வரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.”என்று அந்தக் கடிதத்தில் அவர் கேட்டு கொண்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் சங்கத்திலுள்ள சப் கேரக்டர்களில் நடிக்கும் ஸ்ரீமன், உதயா, நந்தா,ஆதவன் போன்றோரை உசுப்பி விட்டு அதிகாலை நாலரை மணிவாக்கில் சென்னை நுழையும் சொகுசு பஸ்களை நிறுத்தி படு ஆக்ரோஷ்மாக டிரைவர், கிளீனரை மிரட்டி விசாரிப்பது அதிகரித்து வருகிறதாம். அத்துடன் இவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு லோக்கல் போலீசிடம் கூட இன்ஃபார்ம் பண்ணாமல் அசால்டாய் ரெய்டு நடத்தும் போக்கும் அதிகரித்துள்ளதாம்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், “ திருட்டு விசிடி கண்காணிப்பாளரான ஜெயலட்சுமியோட தம்பியும் நடிகர் கார்த்தியும் கிளாஸ் மேட்டாம். அந்த நெருக்கத்துலே ஒட்டு மொத்த நடிகர் சங்கமே திருட்டு விசிடி தடுப்பு போலீசிலே சேர்ந்த மாதிரி ஆக்ட் குடுக்கறாங்க.. இது எங்களுக்கு மட்டுமில்லாம அவங்களுக்கும் சட்டச் சிக்கலைக் கொடுக்குமுன்னு தெரியலை” என்றனர்.

மேலும் நடிகர் சங்க நிர்வாகி ஒருவரிடம் விசாரித்த போது, “ஒரு சங்கத்தின் லட்டர் பேடை தன்னிசையாக பயன் படுத்துகிறார் கள்.இதையெல்லாம் வெளியிடும் முன்பு சங்க நிர்வாகிகளிடம் முறைப்படி பேசி அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் நடக்கறது எதுவும் சரியில்லை.. இப்பல்லாம் நடிகர் சங்கக் கூட்டத்துக்கு வந்து போற நடிகைங்களுக்கு மேக் அப் பேட்டா-ன்னு மூவாயிரம் வரைக்கும் கொடுக்கறாங்க.. நடிகர் சங்க பணத்தை இப்போ விஷால் சார்பா அவரோட பர்சனல் கிளார்க்தான் பார்த்துக்கிட்டு இருக்காறாரு.. அந்த வகையிலே கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு வந்து போன நடிகைங்க மேக் அப்புக்கு மட்டும் ஒன்றரை லட்சம் செலவாகி இருக்கு.. அது மாதிரி.. இன்னும் வேண்டாத செலவினமும் வெட்டியான போக்கும்தான் நடக்குது” என்று சொல்லி வருந்தினார்.

இதனிடையே விஷாலின் போக்குக்கு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வாட்ஸ் -அப் மூலமாக வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில்,”திருட்டு விசிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். திருட்டு விசிடி என்னமோ தமிழ்நாடு திரையரங்குகளில் எடுப்பது போல மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி கிடையாது. தொடர்ச்சியாக 200 படங்கள் வெளியாகிறது என்றால், 5 முதல் 10 படங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அது கூட அந்த திரையரங்க முதலாளியால் கிடையாது.சின்ன திரையரங்கில் ஒரு நாளுக்கு வருமானம் ரூ.2000 கூட கிடையாது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச் மேன் அல்லது ஆப்ரேட்டர் படுத்து தூங்குவார். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்த வேலை நடக்கிறது. அது கூட ஏதோ ஒரு சின்ன திரையரங்கில் தான் நடக்கிறது. அதைக் கூட தடுப்பதற்கு அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை க்யூப் லாக் பண்ணி வைப்பதற்கு க்யூப்பில் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்துமே இதற்கு தயாராக இருக்கிறோம். சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் நடப்பது போல பேசுகிறீர்கள். 2 முதல் 3 சதவீத ஆட்கள் தப்பானவர்களாக இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.

வரிசையாக 200 படங்கள் வெளியாகிறது என்றால் ஒரு படத்திற்கு 54 ஆயிரம் என்றால் மொத்தம் 1கோடி ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். எந்த படத்தின் விசிடி வந்தாலும் நாம் போய் சோதனை செய்யலாம். அந்த 200 படங்களில் 190 படங்கள் வரை வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கும். தமிழ்நாடு திரையரங்குகள் என்று மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து தான் முக்கியமான விசிடி வருகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும் போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறீர்கள்.

ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை வாங்கி 2 வாரம் கழித்து வெளியிடலாமே. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும் போது வெளிநாட்டு உரிமைக்கு ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்க திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து 6 மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம். 2வது அந்த திரையரங்கம் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.

உங்கள் படம் வரும் போது மட்டுமே பேசுகிறீர்கள். முக்கியமான வீடியோ வெளிநாட்டில் இருந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள். பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள். நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தது, தற்போது ஊட்டியில் வெறும் 2 திரையரங்குகள் தான் இருக்கிறது தெரியுமா? ஒரு மாவட்டத்தில் இருக்கிற 38 திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பெரிய நடிகர்களின் படம் போடும் போது ரூ.300க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்.

சென்னை திரையரங்குகளில் எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன்பணம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதே போல கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்டவற்றில் யாராவது சொன்னால் எங்களது வருமானமே போச்சு என்று சொல்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகிற்கு மட்டும் 50%, 40%, 30% என்பார்கள். எங்கே போனீர்கள் நடிகர்கள் எல்லாம்? சிறுதிரையங்கம் என்றால் 80% கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள். மரியாதை வேண்டும் என்பதற்காக பலர் திரையரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் கள். அதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கை கூட எடுத்து விடாதீர்கள். டிக்கெட் ரூ.100க்கு மேல் விற்கக் கூடாது, விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியது தானே” என்று கேட்டதற்கு விஷாலிடமிருந்து இது வரை பதிலில்லை!

Related Posts