தமிழ் குரல் / AI Voice
நேஷனல் ஜியாக்ரபி சேனலில் சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. வேப்பநேரி குழுவினருடன் ரஞ்சனியும் நிவாரணப் பணியில் இருக்கும் கிளிப்பும் வந்தது என்று யாரோ சொல்ல, எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. (சொன்னவர் மட்டும் கையில கிடைச்சாரு…. ஒண்ணும் செய்ய மாட்டேன்.

எமது குழுவினர் எவரும் நகரப் பகுதிகளில் நிவாரணப் பணியில் இருக்கவில்லை, ஊடகங்களோ நிவாரணங்களோ எட்டாத கிராமப்புறங்களுக்குதான் சென்றார்கள், எனவே இதில் அவர்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்தாலும் ஒருபக்கம் ஆசை இருக்கத்தான் செய்தது. நேற்று இரவு மறு ஒளிபரப்பு என்பதால், டூர் போயிருந்த மகள் வீட்டில் டிவி பார்க்கப்போனேன்.
பிளக்கை மாட்டி, ஸ்விட்சை ஆன்செய்து, எக்ஸ்டென்ஷன் பெட்டியை ஆன்செய்து, அங்கே இருந்த நான்கு ரிமோட்களில் எது டிவியுடையது, எது செட் டாப் பாக்ஸுடையது, எது டிவிடியுடையது, எது 5.1 ஸ்பீக்கருக்கானது என்று குழம்பி, எல்லா ரிமோட்களிலும் எதை அழுத்தினால் ஆன் ஆகும் என்று தெரியாமல் எதையெதையோ அழுத்தி ஒருவழியாக டிவியில் காட்சி தெரிந்தபோது ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருந்தது.
கையாளத் தெரியாத ரிமோட்டில் ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி நேஷனல் ஜியாக்ரபி சானலை அடைந்தபோது பத்து நிமிடங்கள் கழிந்து விட்டது. (நேஷனல் ஜியாக்ரஃபியிலேயே இத்தனை சானல்கள் இருக்கா….?!) அதற்குப்பிறகும் ஊமைப்படம் போலத்தான் தெரிந்தது, ஒலி இல்லை. ஆஹா…. 5.1 ஸ்பீக்கர் செட் ஆன் செய்யவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒருவழியாக அதன் ரிமோட்டைக் கண்டுபிடித்து, பொத்தானையும் கண்டுபிடித்து அழுத்த, காதைப்பிளக்கும் சத்தம் எழுந்தது. கதவை அடைத்து வைத்திருந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அடி வாங்காமல் தப்பினேன். கடும்போராட்டுத்துக்குப் பிறகு எப்படியோ ஒலியளவைக் குறைக்கும் பொத்தானையும் கண்டுபிடித்து அளவைக் குறைத்துவிட்டேன். ஸ்அப்பா… என்பதன் அர்த்தம் புரிந்து போனது.
ஒருவழியாக வெள்ளம் பற்றிய கதை விரிந்தது. பார்த்துக்கொண்டிருந்தபோதே திடீரென ஸ்கிரீன் ப்ளாங்க் ஆகிவிட்டது. ஏதாவது பொத்தானை அழுத்தி விட்டேனோ, இல்லை நான் கைவைத்த நேரம் டிவியே புட்டுக்கிச்சோ…. என்று பயந்து போனேன். அப்புறம்தான் புரிந்தது என் கையில் எந்த ரிமோட்டும் இருக்கவில்லை. டிவியின் ஓரத்தில் சிவப்பு விளக்கும் எரிந்து கொண்டிருந்ததும் தெரிந்தது. மறுபடி ஒரு ஸ்அப்பா…..
சில நொடிகளில் நோ சிக்னல் என்ற எழுத்துகள் ஒளிர்ந்தன. சரிதான், ஒனக்கெல்லாம் டிவி கேக்குதா என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்க, நம்ம ராசி அப்படி என்று நினைத்துக்கொண்டு, போய்ப் படுக்கலாமா காத்திருக்கலாமா என்று 5 நிமிடம் கழிக்க, திடீரென்று மறுபடி ஒளிபரப்பு துவங்கியது. ஆனால் 99ஆவது சேனலில்! எப்படி நேராக 520ஆம் எண் சானலுக்கு வருவது என்று தெரியவில்லை. பொட்டு பொட்டென்று பொத்தானை அழுத்தி அழுத்தி அழுத்தி அழுத்தி 520ஐ எட்டினேன்.
*
புதிய செய்திகள் அதிகமில்லை. எல்லாமே கேள்விப்பட்ட, இணையத்தில் பார்த்த செய்திகள்தான். மகனை இழந்த தாய், மாடிக்குச் சென்று உயிர்தப்பிய குடும்பம், மூன்று வாழைப்பழங்களும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் மட்டும் வைத்துக் காலம் கடத்திய 50 வயது பிரம்மச்சாரி, வீட்டுக்குள் வெள்ளம் வந்ததால் எல்லாப் பொருட்களும் நாசமான கதைகள், நீரில் அடித்துச் செல்லப்படும் பிரிஜ், காரின்மேல் கார் ஏறிநிற்கும் காட்சிகள், நீரில் மிதந்த கார்கள், மீட்புப் பணியில் ராணுவத்தினர், தன்னார்வலர்கள், பாய்ந்தோடிய அடையாறு…..
ஏரிகள் ஆக்கிரமிப்பு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஐடி பார்க்குகள் வந்தது, அடையாறு நதித்தடத்தில் விமான நிலையம் கட்டப்பட்டது, கண்மூடித்தனமான கான்கிரீட்மயம்… சமூக வலைதளங்களின் சாதனைகள், ஹாம் ரேடியோகாரர்களின் சேவைகள், செம்பரம்பாக்கம் ஏரி என எல்லாவற்றையும் அலசினார்கள். (செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்ட முட்டாள்தனத்தை கவனமாகத் தவிர்த்து விட்டார்கள்!)
ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும் – ஏரியல் வியூ. மொத்த சென்னையையும் வான்வழிக் காட்சியாக காட்ட முடியாவிட்டாலும், பல பகுதிகளில் பல்லாயிரம் வீடுகளும் பெரிய பெரிய கட்டிடங்களும் கடலைப் போல விரிந்து பரந்த நீருக்கு நடுவே மிதப்பதான காட்சி நிஜமாகவே பயத்தை அளித்தது. இதுவரை காணாத காட்சி. இது பேரிடர் அல்ல, செயற்கைப்பேரிடர் (Man made disaster) என்பதை வலியுறுத்தியது நிகழ்ச்சி.
இயந்திரமயம், தொழில்மயமாக்கல், திட்டமிடாத நகர்ப்புற வளர்ச்சி, காலநிலை மாற்றம், கடல்மட்டம் உயர்வு, தாறுமாறான காலநிலைகள், இயற்கையோடு இயைந்து வாழ்வதை விடுத்து இயற்கையை ஆட்டிப்படைக்க முடியும் என்று நினைத்த முட்டாள்தனம், …… இன்னபிற விஷயங்களை வல்லுநர்கள் பேசினார்கள். எனக்குத் தெரிந்த தேவசகாயம் ஐஏஎஸ் அடிக்கடி தோன்றினார். முகமது யூனுஸ் வந்தார். அப்புறம், சமூக வலைதளங்களில் அடிக்கடி அடிபடும் ஜாக்கி சேகர் உள்ளிட்ட சிலர் வந்தார்கள். கார்த்திக் புகழேந்தி, உமா மகேசுவரன் முதல் எல்லாருடைய பெயர்களும் நினைவில் வந்து அரை மணிநேரத்தில் அந்தப்பத்து நாட்களையும் மறுபடி வாழ்ந்ததுபோல ஆகிப்போனது.
2005 மும்பை வெள்ளத்தின்போதே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அது பரிந்துரைகளை அளித்து விட்டதாம். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கட்டுமானத்தை அனுமதிக்கவே கூடாது என்று அது சொல்லியிருக்கிறதாம். இதுவரை அந்தப் பரிந்துரைகள் கணக்கில் கொள்ளப்படவே இல்லையாம். ஸ்மார்ட் சிடி போதையில் இருக்கும் நமது மத்திய அரசு இனியும் அதை கணக்கில் கொள்ளப் போவதில்லை. வட்டங்களும் மாவட்டங்களும் ரியல் எஸ்டேட் மாபியாக்களும் கோலோச்சும் தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைப் பற்றி எவரும் கவலைப்படப் போவதில்லை – அடுத்த வெள்ளம் வரும் வரையில்.
முத்தாய்ப்பாக ஒரு செய்தி – வெள்ளத்தால் பாதிக்கப்படும் 163 நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறதாம் இந்தியா.
எல்லாத் தரப்பு மக்களையும் வர்க்க பேதமின்றி பிச்சைக்காரர்கள்போல ஆக்கிய வெள்ளத்துக்கு யார் காரணம் என்று யோசிக்கப் போகிறோமா?
படித்து விட்டீர்களா? இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?
