வாக்காளர்கள் எண்ணிக்கை 5.82 கோடியாக்கும்! – ராஜேஷ் லக்கானி தகவல்
தமிழ் நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.82 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் முந்தைய வாக்காளர் பட்டியலைவிட, கூடுதலாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ளனர் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
இதுகுறித்து ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “தற்போது துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 482 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 750 பேர் ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 93 ஆயிரத்து 349 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 383 பேர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றுக்காக பிப்ரவரி மாதம் இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும் பலர் விண்ணப்பித்தனர். ஆன்லைன் மூலமாக மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 271 பேர் விண்ணப்பித்தனர். இதில், சரிபார்ப்பு பணியின்போது முகவரிச் சான்று போன்ற ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் ஒரு லட்சத்து 27 ஆயிரம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் சுமார் 10 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அனைத்து விவரங்களையும் கணக்கிட்டு தற்போது புதிதாக துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தற்போது 2 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 973 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 927 பெண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 720 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 ஆகும். முந்தைய வாக்காளர் பட்டியலைவிட, கூடுதலாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ளனர்.
பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றுக்காக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சேர முடியாது. இந்த துணைப் பட்டியல் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.30-ந் தேதியில் இருந்து (இன்று) ஆன்லைனில் துணை வாக்காளர் பட்டியல் விவரங்களை காண முடியும். ரூ.150 கொடுத்து அதற்கான சி.டி.யை பெற்றுக் கொள்ளலாம்.
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் 29-ந் தேதி (நேற்று) பிற்பகல் 3 மணியோடு நிறைவு பெற்றுவிட்டது. வேட்புமனு தாக்கல் செய்தபோதே அதில் இருந்த குறைபாடுகளை சுட்டிகாட்டி கடிதம் கொடுத்திருந்தோம். அவற்றை வேட்பாளர்கள் சரிசெய்திருப்பார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி தலைவர்களின் பிரதிநிதிகளிடம் நானே பேசி, வேட்புமனு தாக்கலில் ஏதாவது பிரச்சினை இருந்ததா? என்று கேட்டேன். பிரச்சினை எதுவும் இல்லை என்று அவர்கள் பதிலளித்தனர். செலவினப் பார்வையாளர்கள் மே 3-ந் தேதியன்று வருவார்கள்.
அறிவுரை
மே 2-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நேரம் முடிந்ததும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் இறுதி செய்யப்படும். அதிக வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதை அனைத்து கட்சிகளுக்கும் நோட்டீசாக அனுப்பி இருக்கிறோம்.
பணம் பறிமுதல்
தமிழகத்தில் இதுவரை 73.69 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வருமான வரித்துறையினர் மட்டும் 21.23 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். நேற்று முன்தினம் (28-ந் தேதி) ரூ.2.64 கோடி தொகை கைப்பற்றப்பட்டது. 30-ந் தேதியன்று மதுரையில் ஒருவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரூ.25 லட்சம் பிடிபட்டது. விழுப்புரத்தில் நடந்த சோதனையில் வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு உள்பட ரூ.48 லட்சம் மதிப்புள்ள 135 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.



