ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்…(அவர் இறந்த நாளின்று)- 71 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டி

ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்…(அவர் இறந்த நாளின்று)-  71 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டி

கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்…
hitler apr 30
இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?

ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.

உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?

ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.

குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?

நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ்,”குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்…) ஒரு நாள்… மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)

கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.

காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்த வுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?

ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.

கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?

பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.

நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.

பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?

அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா… போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.

அடுத்து என்ன நடந்தது?

உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.

பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?

நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.

ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?

ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.

போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?

ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?

1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான “டவுன்பால்’ எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.

நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?

இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.

error: Content is protected !!