இந்தியாவில் -குறிப்பா தமிழகத்தில் அதிகரிக்கும் மைனர் கிரிமினல்ஸ்! – திருந்துவதே இல்லை?

இந்தியாவில் -குறிப்பா தமிழகத்தில் அதிகரிக்கும் மைனர் கிரிமினல்ஸ்! – திருந்துவதே இல்லை?

கடந்த வாரம் சென்னை ஐகோர்ட் கிளையில், “தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிபபாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை,பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது.இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ளஅனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.இளம் பிராயத்தில் திருக்குறள் பயிற்றுவிக்கப் பட்டால் நேர்மையும், ஒழுக்கமும் உள்ள சமுதாயம் உருவாகும். சமீப காலத்தில் இளம் சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெருகி உள்ளது.அவர்களை சீர்த்திருத்த இளம் பருவம் தொட்டே திருக்குறளை பயிற்றுவிற்றால் நாளைய சமுதாயத்தின் சிறந்த குடி மக்களாக அவர்கள் வருவார்கள். இதனால் திருக்குறளை முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி ஒரு வழக்கு வந்ததும் அதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பும் நினைவிருக்கும்.
minor apr 29
இந்நிலையில் தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர அறிக்கையின்படி, கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் 2795 சிறார்கள் மீது குற்ற வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 22.5 சதவீதம் பேர் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டு விட்டனர். அதே சமயம் மற்ற மாநிலங்களில் எச்சரிக்கப்பட்டு, விடுவிக்கப்படும் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 12 சதவீதமாக மட்டுமே உள்ளது. தமிழகத்தில், சிறார் குற்றவாளிகளில் 14 சதவீதம் பேர் தகுதி அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு, பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் விடப்படுகின்றனர். மேலும் 14 சதவீதம் பேர் சிறப்பு சீர்திருத்த மையங்களில் விடப்படுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டம் ஐபிசி அல்லது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் எஸ்எல்எல் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான்.

சில வழக்குகளில் சமூக பாதுகாப்பு துறையின் அலட்சியத்தால் சிறார் குற்றவாளிகள், தங்களுக்கான சலுகைகளை பயன்படுத்தி தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே வெளியில் வந்து விடுகின்றனர். இதனை வசதி படைத்த அல்லது செல்வாக்கு படைத்த பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சிறார் சீர்திருத்த பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு அடைக்கப்படும் சிறார் குற்றவாளிகள் எந்த வகையிலும் சீர்திருத்தம் பெறுவதில்லை. தமிழகத்தில் உள்ள சீர்திருத்த மையங்கள் சிறைச்சாலைகளை போன்றே உள்ளதால், அங்கு அடைக்கப்படும் சிறுவர்கள் மீண்டும் அதே குற்றத்தை செய்ய தூண்டப்படுகிறார்கள். இதனால் அவர்கள் விடுதலை ஆன பிறகு அவர்கள் மிகப் பெரிய குற்றவாளியாவது எளிதாகி விடுகிறது என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்த்ரிருந்தனர்.

தமிழகத்தில் உள்ள பல சீர்திருத்த பள்ளிகள், சிறார் குற்றவாளிகள் எளிதில் எங்கிருந்து தப்பிச் செல்லும் வகையிலேயே உள்ளது. சீர்திருத்த பள்ளிகளில் இருந்து விடுதலையானதும் அந்த சிறுவர்களின் நிலை எப்படி உள்ளது என எவரும் கண்காணிப்பதில்லை. தாங்கள் செய்த தவறுகளுக்கு தகுந்தாற் போல் தண்டனை கொடுக்கப்படாததாலும், பெரும்பாலும் மன்னிக்கப்படுவதாலும், வெளியில் வந்த பிறகு முன்பை விட கொடூரமான குற்றங்களிலேயே அவர்கள் ஈடுபடுவதாகவும் குழந்தைகள் பல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர்.

இதனிடையேதான் நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் 2012 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 1.30 லட்சம் சிறார்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு, “மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவான தகவலின்படி, கொடுங்குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் முறையே 39,822, 43,506, 48,230 என மொத்தம் 1.30 லட்சம் சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இவர்களில் 27,000 பேர் சிறார் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குழந்தை திருமண வழக்குகள்: அதே காலகட்டத்தில் (2012-2014) குழந்தை திருமணம் தொடர்பாக 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என தனது பதிலில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.