டெல்லி அருங்காட்சியகத்தில் தீ!

டெல்லி அருங்காட்சியகத்தில் தீ!

டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் அமைந்திருக்கிறது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம். இந்திய அரசின் பண்பாட்டு அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நேஷனல் மியூசியத்தில் கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான பல அற்புத சேகரிப்புகளை இங்கு காணலாம். 1947-48ம் ஆண்டுகளில் லண்டனில் நடத்தப்பட்ட ஒரு இந்திய அரும்பொருட்கள் கண்காட்சியிலிருந்து இந்த அருங்காட்சியகத்தின் பின்னணி துவங்குகிறது. ராயல் அகாடமியில் நடத்தப்பட்ட ஒரு கண்காட்சியில் இடம் பெற்ற அரும் பொருட்களை திரும்பவும் அந்தந்த அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவதற்குமுன் டெல்லியிலும் ஒரு முறை அவற்றை காட்சிப் படுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
fire apr 26
அதன்படியே டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்த அரும்பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த பொருட்கள் பல முக்கிய கலா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் டெல்லியி லேயே ஒரு தேசிய காட்சிக்கூடத்தை உருவாக்கி இவை யாவற்றையும் காட்சிப் படுத்துவது சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டது. இப்படியாக உருவான இந்த தேசிய அருங்காட்சி யகம் டெல்லியில் அந்த வருடமே துவங்கப்பட்டு அப்போதைய கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம் 1960ம் ஆண்டில்தான் பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.

இந்த தேசிய அருங்காட்சியகத்தில் பிரமிப்பூட்டும் வகையில் 2 லட்சம் அரும்பொருட்களின் சேகரிப்பு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மட்டுமல்லாது அயல் தேசத்து அரும்பொருட்களும் இவற்றில் அடக்கம். கி.மு 2700 ம் ஆண்டை சேர்ந்த சுடுமண் பொருட்கள் மற்றும் தாமிரப்பொருட்கள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்க வையாகும். மௌரியர் காலத்தை சேர்ந்த மரச் சிற்பங்கள், தென்னிந்திய விஜயநகர சாமராஜ்யத்துக்குரிய கலைப்பொருட்கள், குப்தர் கால கலைப்பொக்கிஷங்கள், இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் மிச்சங்கள், முகலாயர் கால படைப்புகள் மற்றும் கந்தர்வர் காலத்திய பொருட்கள் போன்ற ஏராளமான வகைப்பாடுகளில் இங்கு அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பௌத்த மரபு கலைப்பொருட்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி எனும் இடத் திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தர் தொடர்புடைய புராதனப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மொகஞ்ச தாரோவிலி ருந்து எடுக்கப்பட்ட நடன மங்கை சிலை, பழங்குடி கலைப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள், குறுஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், சுவரோவியங்கள், ஆடைகள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் மற்றும் ஜெஹாங்கீர் மன்னரால் கையெழுத்திடப்பட்டுள்ள சில அரிய கலைப்பொருட்கள் என்று ஏராளமான சேகரிப்புகளை இந்த தேசிய அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காணலாம்.

ஓவியங்கள், ஆபரணங்கள், தொல்லியல், ஆவணங்கள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் என்று முறைப்படி வகைப்படுத்தப் பட்டு இங்கு எல்லா அரும்பொருட்களும் பாதுகாக்கப்படுகின் றன.தேசிய அருங்காட்சியகத்தின் பல தளங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எல்லா அரும்பொருட்களையும் பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பேர்பட்ட இங்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்புப் பணியின்போது இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

“தீயின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தததால் 40 வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும் அருங் காட்சியகம் முற்றிலுமாக சேதமடைந்தது” என டெல்லி தீயணைப்பு துறையின் கூடுதல் இயக்குநர் அடுல் கார்க் தெரிவித்துள்ளார். ஆறு மாடிகள் கொண்ட அக்கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளம் மட்டுமே தப்பியது. அதேபோல் அருகிலிருந்த பிக்கி மையமும் தீ விபத்திலிருந்து தப்பியது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி அருங்காட்சிய தீ விபத்தைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் தீயணைப்பு வழிமுறைகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் 34 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.