திருப்பதி கோயிலில் இன்னியிலேயிருந்து இலவசமா திருமணம் செஞ்சுக்கலாமே!

திருப்பதி கோயிலில் இன்னியிலேயிருந்து இலவசமா திருமணம் செஞ்சுக்கலாமே!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் திருமணம் செய்கின்றனர். இதற்காக தேவஸ்தானம் பல்வேறு கட்டணங் களை வசூலித்து வந்த நிலையில், இன்று 25ஆம் தேதி முதல் எந்தவித கட்டணங்களும் இன்றி, பக்தர்கள் திருமணத்தை இலவசமாக நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
tirupati apr 25
திருமலையில் பாபவிநா சனம் தீர்த்தம் அருகே திருமண மேடை உள்ளது. இங்கு நடக்கும் திருமணத்துக்கு தேவஸ்தானம் சார்பில் புரோகிதர்கள், மேளக்காரர்கள் ஏற்பாடு செய்யப்படும், புரோகிதருக்கு ரூ.500–ம், மேளக்காரருக்கு ரூ.300–ம், வீடியோ எடுக்க பயன் படுத்தப்படும் மின்சா ரத்துக்கு ரூ.60–ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதனை இலவசமாக வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து இலவச திருமண திட்டத்தை 25 ஆம் தேதி -இன்று முதல் அமுல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சுபதம் வழியாக மூலவரை தரிசிக்கலாம்.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ், “வருங்காலத்தில் இந்த இலவச திருமண திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம் மற்றும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். திருமணத்தை முன்பதிவு செய்ய ஆன்லைனில் தனி ஆப்சன் ஏற்படுத்தப்படும். அதோடு தங்கும் அறை, திருமணத்துக்கு தேவையான பொருட்கள் இலவசமாக கொடுக்கவும் பரிசீலனை செய்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.