ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி சொத்து விபரம் இவ்வளுதான்னு சொன்னா நம்பிடணும்!
சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் தனக்கு ரூ. 117 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 637 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 11 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது.கடந்த 2011 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு ரூ. 51 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ. 67 கோடி அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் விவரம்
வங்கிகளில் வைப்புத் தொகை, நிறுவனங்களில் முதலீடுகள், 9 வாகனங்கள், தங்க, வெள்ளி நகைகள் என மொத்தம் ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் போயஸ் தோட்ட இல்லம் உட்பட ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.மேலும் வங்கிகளில் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 கடன் உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி தயாளுஅம்மாள், துணைவியார் ராஜாத்திஅம்மாள் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி சொத்து அதன் விவரம் :
அசையும் சொத்துகள் ரூ.13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை என்றும் கையில் உள்ள ரொக்கம் ரூ.50 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.10 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 178 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 3 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ராசாத்தி அம்மாள்
துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.56,850 என்றும், அசையும் சொத்து ரூ.37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ.11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதில், தனக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை சேர்த்து அசையும் சொத்துகளாக ரூ.30 லட்சத்து 12 ஆயிரத்து 915 மதிப்பில் உள்ளது. சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனம் கிடையாது. அதேபோல, அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. அதேபோல, பல்வேறு பிரிவுகள் மொத்தம் 9 வழக்குகள் உள்ளன குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி சொத்து விபரம்
அவரது மனைவி சௌமியாவுக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.55 ஆயிரம் மற்றும் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் என அசையும் சொத்துகளாக ரூ.6 கோடியே 70 லட்சத்து 46,562 உள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. சிண்டி கேட் வங்கியின் கோடம்பாக்கம், மைலாப்பூர் கிளைகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் சௌமியா கணக்கில் இருப்பாக ரூ.85,902 உள்ளது.
அசையா சொத்துகளாக காவேரிப்பாக்கம், திண்டிவனம், தைலாபுரம், செட்டிக்குப்பம், ஏற்காடு (கே.புதூர்) ஆகிய இடங்களில் விவசாய நிலங்களாக சந்தை மதிப்பில் ரூ.8 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 500 உள்ளது. விவசாயம் அல்லாத நிலங்களாக சென்னை தி.நகர், அரும்பாக்கம், பத்மநாப நகர் ஆகிய பகுதிகளில் சந்தை மதிப்பில் ரூ.16 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரம் உள்ளது. பல்வேறு வணிக வளாகங்கள் சந்தை மதிப்பில் ரூ.38 லட்சம் மற்றும் தி.நகர் குடியிருப்புக் கட்டடம் சந்தை மதிப்பில் ரூ.80 லட்சம் உள்பட ரூ.26 கோடியே 21 லட்சத்து 93 ஆயிரத்து 500 ஆகும்.
கடனாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.3 கோடியே 95 லட்சத்து 42 ஆயிரத்து 468 உள்ளது.
மகள்கள் சஞ்சித்ரா கையிருப்பு ரொக்கம் ரூ.10 ஆயிரம் மற்றும் வங்கி இருப்பு ரூ.99 ஆயிரத்து 760 உள்ளது. அதேபோல, சங்கமித்ராவுக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.25,000 மற்றும் வங்கி இருப்பு ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 132 ரூபாய் உள்ளது.
2014-15 நிதியாண்டில் அன்புமணி தனது பெயரில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 170-க்கும் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனைவி செüமியா ரூ.64 லட்சத்து 73 ஆயிரத்து 242 வருமான வரி தாக்கல் செய்துள்ளார். விவசாயம் தொடர்பான வருவாயாக ரூ.25 லட்சம் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். இந்த தகவல்களை அவரது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்


