முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வட மாநிலங்களில் வெளியாகும் “பயோனீர்’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அந்த நாளிதழில் கார்த்தியின் முதலீடுகள் தொடர்பாக வெளியான செய்தி விவரம் வருமாறு:
வெளிநாட்டு சொத்துகள்: சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனமான “அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங்’ மூலம் வெளிநாடுகள் பலவற்றில் கார்த்தி சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன விதிகளின்படி, அந்த நாடுகளின் உதவியுடன் கார்த்தியின் வெளிநாட்டு அலுவலகங்களில் உள்ள பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்க முயற்சித்து வருகிறோம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தின் விவரங்களைப் பெறுவது தொடர்பாக சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள “விசாரணை விவரம் கோரல் கடிதம்’ ஏற்கெனவே அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் 2004-2014 ஆண்டு வரை மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் பதவிகளை கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் வகித்து வந்தார். அந்த சிங்கப்பூர் நிறுவனம் 2011-இல் பிரிட்டனின் சாமர்செட் பகுதியில் ஒரு மில்லியன் பவுண்ட் (10 லட்சம் பவுண்ட்) மதிப்பில் 888 ஏக்கர் அளவிலான சர்ரிட்ஜ் பண்ணையை அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்ஸல்டிங் வாங்கியுள்ளது. இது தொடர்பான நில பட்டாக்களை மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித் துறை குழு கைப்பற்றியுள்ளது. இதேபோல, கேம்ப்ரிட்ஜில் அர்டேவியா டிஜிட்டல் நிறுவனத்தை வாங்கியுள்ளது. மேலும், லண்டனில் உள்ள ஓப்பன்ஹெட்மர் முதலீடு நிறுவனத்துடனும் நிதிப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு: இலங்கையில் “லங்கா ஃபார்சூன் ரெஸிடென்சீஸ்’ என்ற பெயரில் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஓய்விட (ரிஸார்ட்) நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், “வெலிகாமா’ கடற்கரை பொழுதுபோக்கிடம், எமரால்டு கடற்கரை ஹோட்டல் ஆகியவற்றையும் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடத்திய சோதனையின் போது இலங்கையின் யூனியன் டெவலப்மென்ட், இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் செய்த நிதிப் பரிவர்த்தனைகளை நிரூபிக்கும் ஆவணங்கள் சிக்கியுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் “ரோவே ஃபார்ம்’, கேப் ஓர்கார்ட்ஸ், ஜான்ட்விலியட் எனப்படும் திராட்சைத் தோட்டங்கள் ஆகியவற்றை வாங்க துபை வழியாக நிதிப் பரிவர்த்தனையில் அந்த சிங்கப்பூர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் நிக்கோலஸ் ஸ்டெயின் அசோசியேட்ஸ் மூலம் நிதிப் பரிவர்த்தனையில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துபையைச் சேர்ந்த டன்னஸ் பிராப்பர்டீஸ் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற 1.7 மில்லியன் (17 லட்சம்) சிங்கப்பூர் டாலர்கள் அளவிலான பரிவர்த்தனைகளை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
50 ஆயிரம் டாலர் பரிவர்த்தனை: இதேபோல, பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறுவனங்கள் மூலம் இண்டர்நேஷனல் ப்ரீமியர் டென்னிஸ் ஏசியா அணியை வாங்கியதற்கான நிதிப் பரிவர்த்தனை, “யுபிஎஸ்’ என்ற ஸ்விஸ் வங்கியுடன் நிதிப் பரிவர்த்தனை, மேட்ச் பாயின்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்கும் மணிலா மேவரிக்ஸ் அணியை வாங்கியது போன்றவற்றுக்காக 12 மில்லியன் டாலர்களுக்கான நிதிப் பரிவர்த்தனை, ஸ்பெயினின் பார்சிலோனியாவில் அட்வான்டேஜ் எஸ்டிரேஜியா எஸ்போர்ட்வியா என்ற விளையாட்டு மையத்தை 2012-இல் வாங்கியது, “சென்னை ரிசர்வ் பிசினஸ் அட்வான்டேஜ் செக்கிங்’ என்ற பாங்க் ஆஃப் அமெரிக்கா வங்கிக் கணக்குக்கு சிங்கப்பூர் நிறுவனம் 50 ஆயிரம் டாலர்கள் பரிவர்த்தனையை செய்துள்ளது, அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் சென்னை நிறுவனம் மூலம் ஏர்செல் டெலிவெஞ்சர்ஸ், டிசிபி கிளையன்ட்ஸ், டியாகியோ ஸ்காட்லாந்து, காத்ரா குழுமம், இலங்கை ஏற்றுமதி வளர்ச்சி வாரியம், எஸ்ஸார் ஸ்டீல், கோகுல் பில்டர்ஸ், எஸ்.குமார், ஐஎன்எக்ஸ் மீடியா, தியாகராஜர் மில்ஸ், சக் சாஃப்ட், ஈஎல் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்களுடனும் அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் சிங்கப்பூர் நிறுவனம் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்று நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


