சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “ தீவிர காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை, புதுச்சேரிக்கு கிழக்கு – தென் கிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அது புதுச்சேரிக்கு வடக்கே நகர்ந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணி யளவில் கரையைக் கடந்தது. கரையைக் கடந்துள்ளதால் சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாகக் குறையும். உள்மாவட்டங்களைப் பொருத்தவரை மழையின் அளவு அதிகரிக்கும்.
weather 10
அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் பலத்த மழையும், சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு வடக்கு, தெற்குத் தமிழகக் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்தத் தரைக் காற்று வீசக் கூடும். ஒரு சில நேரங்களில், படிப்படியாகக் காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று பலமாக வீசக் கூடும். இதனால், கடல் சீற்றத்துடன் காணப்படும். ஆகையால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்” என்றார் ரமணன்.

இதனிடையே சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது இரண்டு தினங்களுக்கு முன்பு வரை சாரலுடன் கூடிய மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில், புதிதாக தென் மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை (நவம்பர் 7) புயல் சின்னம் உருவானது.காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; தொடர்ந்து திங்கள்கிழமை (நவம்பர் 9) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புதுச்சேரி அருகே மையம் கொண்டிருந்தது. இதனால் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகல் வரை கடுமையான குளிர் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. விடாமல் பெய்த மழையால், சென்னை உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.

மழை பதிவு (மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை அம்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் கேவிகே காட்டுக்குப்பம், சீர்காழி, ஆணைக்காரன்சத்திரத்தில் தலா 200 மி.மீ. மழை பதிவானது.சிதம்பரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இடங்களில் 189 மி.மீ. மழையும்,செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் 180 மி.மீ. மழையும் பதிவானது.

காரைக்கால், மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், பூந்தமல்லி, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் 170 மி.மீ. மழையும், சோழவரம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 160 மி.மீ. மழையும், தரமணி, காஞ்சிபுரம், கொளப்பாக்கம் ஆகிய இடங்களில் 150 மி.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், நாகை, மாதவரம், நெய்வேலி, சென்னை நுங்கம்பாக்கம், கடலூர் ஆகிய இடங்களில் 140 மி.மீ. மழையும் பதிவாகியது. மேலும் சென்னை டி.ஜி.பி. அலுவலகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் 130 மி.மீ. மழை பதிவானது.

Related Posts