பீகார் சி. எம் நிதிஷ் குமார் : மினி பயோகிராபி!
பீகார் முதல்வராகப் போகும் நிதிஷ்குமார் பாட்னா என்.ஐ.டி.யில் படித்து, மின்பொறியியலில் பட்டம் பெற்று. பீகார் மின்வாரியத்தில் மின் பொறியாளர் பணிக்கு சேர்ந்தார். பின்னர் அரசியலில் குதித்தார். கூடவே ஆசிரியையான மஞ்சு சின்காவை மணந்தார். இந்த தம்பதியருக்கு நிஷாந்த் என்றொரு மகன். மஞ்சு சின்கா, கடந்த 2007-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

முன்னதாக அரசியல் களத்தில் ஜே.பி. என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோயா ஆகிய சோசலிஷ தலைவர்களின் வழியில் நடந்தார். ஒரே நாளில் அவர் சிகரம் ஏறி விட வில்லை. படிப்படியாக முன்னேறினார்.
* 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கினார். 1985-89 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். 1987-1988 காலகட்டத்தில் மாநில லோக்தள தலைவர் ஆனார்.
* 1989-ல் மாநில ஜனதாதள பொதுச்செயலாளர் ஆக பொறுப்பேற்றார். அதே ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். குறுகிய காலம், விவசாயத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தார்.
தொடர்ந்து 1991, 1996, 1998 தேர்தல்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனதுடன், பாராளுமன்ற கட்சியின் துணைத்தலைவராகவும் உயர்ந்தார்.
* 1998-1999 காலகட்டத்தில் மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் தரைவழி போக்குவரத்து துறையை கவனித்தார்.
* 1999 தேர்தலில் வெற்றி பெற்று, 5-வது முறையாக எம்.பி. ஆனார். சிறிது காலம் போக்குவரத்து துறை மந்திரியாகவும், பின்னர் விவசாய துறை மந்திரியாகவும் இருந்தார்.
* 2001-2004 காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக பொறுப்பு வகித்தார்.
* 2004 தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக எம்.பி. ஆனார். பாராளுமன்ற ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.
* 2005-ம் ஆண்டு அவரது அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனை. அவர் பீகார் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.
தொடர்ந்து 2010-தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறை முதல்-மந்திரி பதவி ஏற்றார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தக் கட்சியுடனான உறவை ஐக்கிய ஜனதாதளம் முறித்தது.
ஆனாலும், தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வெளியில் இருந்து பெற்று நிதிஷ் குமார் ஆட்சியை தொடர்ந்தார்.
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் 40 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் மட்டும்தான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பதவி விலகி, ஜித்தன்ராம் மஞ்சியை முதல்-அமைச்சர் ஆக்கினார்.
ஆனால் மறுபடியும் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ஏற்றார்.
இப்போது பீகார் சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது, ஆட்சியை தக்க வைத்தால்தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை, நிதிஷ்குமாருக்கு வந்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கோ பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை நிலைநிறுத்துவதோடு, தன்னோடு கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமாரை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றவேண்டிய நிலை.அக்னி பரீட்சையாக இந்த தேர்தல் அமைந்தது.
இதில் பீகார் அரசியலில் சாணக்கியர் என்ற பெயரைப் பெற்ற நிதிஷ்குமார், தனது சாணக்கியத்தனத்தை காட்டினார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழி, அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்க உதவியது.
பீகார் அரசியலில் நரேந்திர மோடியை வீழ்த்தி, வெற்றிக்கொடி நாட்டி, நிலைக்க வேண்டும் என்றால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழியின்படி தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்துடன் கை கோர்த்துத்தான் ஆக வேண்டும் என முடிவுக்கு வந்தார். அதைச் செய்தார். இருவருக்கும் பொது எதிரி நரேந்திர மோடி.காங்கிரஸ் கட்சியும் மோடியின் எதிரி என்ற வகையில் அந்த கட்சியையும் இணைத்து மெகா கூட்டணி ஒன்றை உருவாக் கினார் நிதிஷ் குமார்.இந்த கூட்டணிதான் தேர்தலில் மோடியின் ஆவேச, புயல் வேக பிரசாரத்துக்கு ஈடுகொடுத்து, அபார வெற்றி பெற்றிருக்கிறது. நிதிஷ்குமார் 4-வது முறையாக பீகாரின் முதல்-அமைச்சர் பதவியை ஏற்கிறார்.


