டாஸ்மாக் கடை நேரத்தை 5 மணி நேரமாக குறைக்கச் சொல்லுங்க ஆனர்: ஹைகோர்ட்டில் வழக்கு
டாஸ்மாக் மதுபான கடையின் பணி நேரத்தை 5 மணி நேரமாக குறைக்கக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “1971-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதன்பின்னர், சாராயக்கடை, கள்ளுக்கடை, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மட்டும் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
2003-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. அதன்பின்னர், தமிழக டாஸ்மாக் நிறுவனமே மதுபானங்களை நேரடியாக விற்பனை செய்து வருகிறது. அதுவும் பள்ளிகள், கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகே ஏராளமான கடைகளை திறந்து, மதுபானங்களை தாராளமாக கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால், பலர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மதுபோதைக்காகவும், மதுவின் போதையிலும் பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்களினால் இறப்பவர்களை விட தற்போது, மதுவினால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் மதுவின் கொடுமைகளை அறிந்து, அம்மாநில அரசுகள், மதுவிற்பனை நேரத்தை கணிசமாக குறைத்துவிட்டது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே, பிற மாநிலங்களை போல மதுவிற்பனை செய்யும் நேரத்தை குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதாவது, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்”என்று அதில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டாஸ்மாக் விதிகளின்படி, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால், இந்த விதிகளை டாஸ்மாக் நிறுவனம் பின்பற்றுவதில்லை. எனவே, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.


