நடிகர் சங்கத்தில் கருணாநிதிக்கு ஓட்டுரிமை இல்லையா? கோலிவுட் பரபர!
விரைவில் நடக்கவிருக்கும் நடிகர் சங்க வாக்காளர் பட்டியலை சங்கங்களின் பதிவாளர் கீதா நேற்று வெளியிட்டார். ‘இந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் இருக்கின்றன’ என நடிகர் விஷால் அணி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கிறது. தமிழ் திரை உலகில் கதை, வசனகர்த்தா, நாடக நடிகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ஆனால் தற்போது ஓட்டுப் போடும் உரிமையை மறுக்கும் வகையில் தொழில் முறை இல்லாத ஆயுட்கால உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். எனவே அவர் இனி நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், முதல்வர் ஜெயலலிதா, ஓட்டுப் போடும் உரிமை பெற்ற ஆயுட்கால உறுப்பினராகவே இம்முறையும் இடம் பெற்று இருக்கிறார். கடந்த முறை, வாக்காளர் பட்டியலில், 28வது இடத்தில் இருந்த அவர் இப்போது, 38வது இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், 70வது இடத்தில் இருந்து, 80வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஒரு ஆயுட்கால உறுப்பினர், மூத்தவர் என்ற அடிப்படையில், படிப்படியாக முன்வரிசைக்குத் தான் மாற்றப்பட வேண்டும்; ஆனால், பின்னுக்கு தள்ளி இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
அத்துடன் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் மற்றும் நடிகர் ராதாரவியின் மகன் அரி உட்பட, சிலர் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆண்டு நடந்த செயற்குழுவில், 250 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற புகாரும் எழுந்துள்ளது.
மேலும் நடிகர் சங்கத் தலைவர், தென்காசி எம்.எல்.ஏ., ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார், சரத்குமார். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவர் போட்டியிட தடை விதிக்கும் சட்ட விதிகளை நடிகர் விஷால் அணியினர் கையில் எடுத்துள்ளனர். நடிகர் சங்க விதிமுறைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தால் நடிகர் சங்க நிர்வாகியாக செயல்படவும் ஓட்டுப் போடவும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தகுதி கிடையாது. எனவே, இந்த அடிப்படையில் தென்காசி எம்.எல்.ஏ., வாக இருக்கும் சரத்குமார் அரசிடம் இருந்து மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்க விஷால் அணி ஆயத்தமாகி விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது


